வளைகுடா செய்திகள்
குவைத்தில் அமலில் இருக்கும் ஊரடங்கை ஐந்து கட்டங்களாக தளர்த்த முடிவு..!!
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பால் குவைத் நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது அந்நாட்டில் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கான ஐந்து கட்ட திட்டத்தை குவைத் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
குவைத் சுகாதார அமைச்சர் டாக்டர் ஷேக் பாஸல் அல்-சபா இந்த திட்டம் நாளை (மே 31,2020) முதல் தொடங்கும் என்றும் ஒவ்வொரு கட்டமும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் என்றும், அனைத்து இயக்கமும் சுகாதார அதிகாரிகளின் மதிப்பீட்டிற்கு உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு கட்டத்திலும் நேர்மறையான பலன் கிடைத்தால் அடுத்த கட்டத்திற்கு செல்வோம் அல்லது பலன் கிடைக்காவிடில் தற்போதைய கட்டத்தில் மேலும் சிறிது காலம் இருப்போம் அல்லது முந்தைய கட்டத்திற்குச் செல்வோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
முதல் கட்டம்
- நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பகுதி ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது . ஃபர்வானியா, கைதன் மற்றும் ஹவாலி ஆகிய பகுதிகளுக்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமிருப்பதால் முழு ஊரடங்கு உத்தரவு மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதல் கட்டத்தில் மீண்டும் தொடங்குவதற்கான செயல்பாடுகள்: மசூதிகள், தொழில்துறை நடவடிக்கைகள், பராமரிப்பு மற்றும் சலவை உள்ளிட்ட பொது சேவைகள், வீட்டு விநியோக சேவைகள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றில் உணவு சேவைகள், உணவு சில்லறை கடைகள், கூட்டுறவு சங்கங்கள், நிறுவன போக்குவரத்து வாகனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ரோந்து நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவ கிளினிக்குகள் மற்றும் கார் பட்டறைகள் ஆகியவை மீண்டும் இயங்குவதை இது உள்ளடக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டம்
- இந்த கட்டத்தில், டாக்டர் அல்-சபா கூறுகையில் ஊரடங்கு உத்தரவு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையாக குறைக்கப்படும் என்றும், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் 30 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- மேலும், கட்டுமானத் துறையில் பணிகள் மீண்டும் தொடங்குவது, வங்கி, மால்கள் எட்டு மணி நேரம் திறக்கப்படுவது போன்றவற்றை இது உள்ளடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
- உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் அமர்ந்து உணவு உண்பதற்கான தடை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பூங்காக்கள் மக்களுக்காக திறக்கப்படும்
மூன்றாம் கட்டம்
- டாக்டர் அல்-சபா, மூன்றாம் கட்ட திட்டத்தில் ஊரடங்கு உத்தரவு முடிவடையும் என்றும், சுகாதார அதிகாரிகள் லாக்டவுன் செய்யப்பட்ட பகுதிகளின் நிலைமையை மதிப்பிடுவார்கள் என்றும் கூறினார்.
- அலுவலகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என விதிமுறைகள் மாற்றப்படும் என்றும் சமூக பராமரிப்பு இல்லங்களுக்கு சென்று வர அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அத்துடன் ஹோட்டல், ரிசார்ட்ஸ் மற்றும் ஹோட்டல் குடியிருப்புகள் மீண்டும் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. டாக்சிகள் ஒரே ஒரு பயணியுடன் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என்றும் மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்காம் கட்டம்
- நான்காம் கட்டத்தில், சுகாதார அமைச்சர் கூறுகையில், அலுவலகங்களில் பணிபுரியும் தொழிலாளர் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உணவகங்களில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் கட்டம்
- இறுதி கட்டத்தில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அலுவலகங்களில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படும்.
- மேலும், குடும்பங்கள் ஒன்றுகூடுதல், திருமணங்கள், சமூக நிகழ்வுகள் மற்றும் பட்டமளிப்பு விழாக்கள் போன்றவற்றிக்கான தடை நீக்கப்படும் என்றும் விளையாட்டு கிளப்புகள் மற்றும் ஸ்பாக்கள், கலாச்சார நிகழ்வுகள், ஜிம்கள், கண்காட்சிகள் மற்றும் மாநாடுகள், முடிதிருத்தும் கடைகள், அழகு மையங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொது அரங்கங்கள், சினிமா அரங்குகள் மற்றும் திரையரங்குகளும் மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.