அமீரக செய்திகள்

கொரோனா சிகிச்சையில் புதிய சாதனை படைத்த அமீரகம்..!!!

கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் உலகளவில் பல வகையான சிகிச்சைகள் முயற்சி செய்யப்பட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றன. அதில் ஒரு புதிய முறையாக ஸ்டெம் செல்களைப் (stem cells) பயன்படுத்தி மேற்கொள்ளும் புதிய வகை மருத்துவ சிகிச்சை ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முறையாக நடைபெற்று வருவதாக ஷேக் கலீஃபா மருத்துவ நகரத்தின்(Sheikh Khalifa Medical City) ஹீமாட்டாலஜி (Hematology)  மற்றும் ஆன்காலஜி (Oncology) துறைத்தலைவர் டாக்டர் பாத்திமா அல் காபி சனிக்கிழமை தெரிவித்துள்ளார். ஸ்டெம் செல்களை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் அபுதாபி ஸ்டெம் செல் மையத்தின் (Abu Dhabi Stem Cell Center) இந்த முன்னேற்றம் ஒரு தேசிய சாதனை என்று அவர் கூறியுள்ளார்.

இது பற்றி ஸ்டெம் செல் திட்டத்தின் உதவி ஆராய்ச்சியாளரான டாக்டர் பாத்திமா கூறுகையில் “28 பேர் அடங்கிய நிபுணர்களும் ஆராய்ச்சியாளர்களும் குழுவாக ஒன்றிணைந்து இந்த சிகிச்சையை உருவாக்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அதிகாரி, ஸ்டெம் செல்களை பயன்படுத்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பது உதவிகரமாக இருக்கிறது என்றும் மேலும் இந்த வகையிலான சிகிச்சையின் போது நோயாளியை முழுவதுமாக குணப்படுத்த முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “கொரோனாவின் நெருக்கடியைச் சமாளிக்க எங்கள் அனைத்து அறிவியல் திறன்களையும் நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். இந்த புதிய சிகிச்சையை உருவாக்கியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முறையாக மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு தேசிய சாதனையாகும். இந்த சிகிச்சையானது கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதில் மிக உதவிகரமாக இருக்கிறது ஆனால் கொரோனாவிலிருந்து முற்றிலுமாக குணமடைவதற்கான சிகிச்சையை இது வழங்காது. இந்த சிகிச்சையானது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு அவர்களுக்கு வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளில் இருந்து மீண்டு வர உதவி புரிகிறது. எனினும், இந்த சிகிச்சை கொரோனா வைரஸை முழுவதுமாக அழிக்காது” என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளியின் சொந்த இரத்தத்திலிருந்து ஸ்டெம் செல்களைப் பிரித்தெடுப்பது மற்றும் அவற்றைச் செயல்படுத்திய பின் அவற்றை மீண்டும் நோயாளியின் உடலில் உட்செலுத்துவது ஆகியவை இந்த ஸ்டெம் செல் சிகிச்சையில் அடங்கும். இது கோவிட் -19 இன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளில் இந்த சிகிச்சை சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சிகிச்சையானது உலக மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்டெம் செல் சிகிச்சை ஏப்ரல் 4 ஆம் தேதி ஒரு நோயாளிக்கு முதன்முதலில் பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இதுவரை, 73 நோயாளிகளுக்கு ஸ்டெம் செல்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 25 சதவீதம் பேர் ICU வில் இருந்து சிகிச்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் “அடுத்தகட்ட ஒப்பீட்டு பரிசோதனையை மேற்கொள்வதற்கும், ஸ்டெம் செல் சிகிச்சை பெறாத நோயாளிகளின் அறிக்கையோடு ஒப்பீடு செய்வதற்கும் இந்த சிகிச்சைக்கான தரவுகள் சேகரிக்கப்பட்டு தற்பொழுது தரவு சேகரிப்பை நாங்கள் முடிக்க உள்ளோம். ஸ்டெம் செல்கள் சிகிச்சையைப் பெற்ற நோயாளிகளின் குழுக்களை, ஸ்டெம் செல் சிகிச்சையை பெறாத நோயாளிகளின் குழுக்களோடு ஒப்பீடு செய்வோம். இதன் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கையானது மிகவும் நடைமுறைக்குரிய மற்றும் திறமையானதாக இருக்கும்” என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஸ்டெம் செல் சிகிச்சை என்றால் என்ன?

ஸ்டெம் செல்கள் (stem cells) ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையானது எவ்வாறு வெற்றிகரமாக இருந்தது என்பதை விரிவாகக் கூறிய அவர், “ஸ்டெம் செல்கள் மனித உடலில் ஒத்த குணாதிசயங்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒரு குணாதிசயம் வெவ்வேறு வகையான உயிரணுக்களாக மாறுவது, வரம்பற்ற முறையில் இனப்பெருக்கம் செய்வது, மேலும் ஒத்த ஸ்டெம் செல்களை உருவாக்குவது போன்றவையாகும். ஆராய்ச்சியாளர்கள் புதுப்பிக்கும் திறனைக் கொண்டிருப்பதாக நம்பியுள்ள கரு ஸ்டெம் செல்கள் (embryonic stem cells) எனப்படும் ஒரு வகை பழமையான ஸ்டெம் செல்களை நாங்கள் தனிமைப்படுத்தினோம். இது சேதமடைந்த செல்களைப் புதுப்பித்து, நுரையீரல் திசுக்களில் கொரோனா வைரஸால் ஏற்படும் அலர்ஜியை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு அதனை சரிசெய்து மற்றும் சேதமடைந்த செல்களை தானாக புதுப்பிபதில் பங்களிக்க முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்”.

“இந்த வகையான சிகிச்சை பயன்படுத்துவதன் நன்மை என்னவென்றால், அவற்றின் சேகரிப்புக்கு மற்ற வகை ஸ்டெம் செல்களை போல அறுவை சிகிச்சை தேவையில்லை. இந்த வகை சிகிச்சைக்காக நாங்கள் நோயாளியிடமிருந்து ஒரு இரத்த மாதிரியை எடுத்து அறுவை சிகிச்சை தலையீடு இல்லாமல் ஸ்டெம் செல் நெபுலைசேஷன் (stem cell nebulisation) மூலம் நுரையீரலில் செலுத்துகிறோம்”.

“இரத்த மாதிரியை எடுத்து அதிலிருந்து செல்களைப் பிரித்தெடுத்த பிறகு, இது ஒரு வேதியியல் செயல்முறைக்கு உட்படுத்தப்படுகிறது, அங்கு நோயாளியின் வளர்ச்சிக்கு காரணமான பிளேட்லெட்டுகள் செயல்படுத்தவும், செல்களை மாற்றியமைக்கவும், நோயாளிகளின் நுரையீரலில் மீண்டும் உடலில் உட்செலுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன” என்று டாக்டர் பாத்திமா ஸ்டெம் செல் சிகிச்சையளிப்பதை பற்றி விளக்கியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!