சவூதி அரேபியா : 90,000 க்கும் மேற்பட்ட மசூதிகள் வணக்க வழிபாட்டிற்காக மீண்டும் திறப்பு..!! வழிபாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள்..!!
சவூதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக விதிக்கப்பட்டிருந்த வணக்க வழிபாட்டுத்தலங்கள் மீதான தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து, புனித நகரான மக்காவில் உள்ள மசூதிகளை தவிர்த்து நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 31) முதல் மீண்டும் திறக்கப்படுவதாக சில தினங்களுக்கு முன்பு சவூதி அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள 90,000 க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய வழிபாட்டுத்தளங்களை மீண்டும் திறப்பதற்காக, அனைத்து மசூதிகளில் பராமரிப்பு, சுத்தம் மற்றும் சுத்திகரிப்பு பணிகளை சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் அமைச்சகமும் மற்றும் அதன் ஊழியர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்லாமிய விவகார அமைச்சர் டாக்டர் அப்துல் லதீப் அல் ஆஷீக் அவர்களின் வழிகாட்டுதலின் படி, சீனியர் உலமாக்களின் கவுன்சில் வழங்கிய ஆலோசனைகளுக்கு ஏற்ப சவூதி அரேபியா முழுவதும் மூடப்பட்டிருந்த மசூதிகளை மீண்டும் திறப்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா பரவுவதைத் தடுக்க அனைத்து வழிபாட்டாளர்களும் தங்கள் பாதுகாப்பிற்காக தடுப்பு நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று அமைச்சகம் தீவிரமான ஊடக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது. அதன் படி, தொழுகைக்கு முன்பு செய்யப்படும் உடல் சுத்தத்தை வீட்டிலேயே செய்தல், வழிபாட்டுத்தலங்களிலிருந்து திரும்புவதற்கு முன்பும் தங்களின் வீட்டிற்கு சென்ற பின்பும் தங்களின் கைகளை நன்றாக கழுவுதல் மற்றும் சானிட்டைஸர்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை வழிபட்டாளர்களுக்கு அமைச்சகம் வழங்கியுள்ளது.
முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் தங்கள் பிரார்த்தனைகளை வீட்டிலேயே செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் புனித குர்ஆனை மொபைல் போன் மூலம் ஆன்லைனிலோ அல்லது தனிப்பட்ட குர்ஆன் நகல் மூலமாகவோ படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல், மசூதிகளில் பிரார்த்தனை செய்ய வரும் வழிபட்டாளர்கள் தங்களின் தனிப்பட்ட பாயைக் (mat) கொண்டு வருவதும் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் பிரார்த்தனையின் போது ஒருவருக்கொருவர் இடையில் இரண்டு மீட்டர் இடைவெளியை பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் மசூதிகளுக்கு வருவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதனுடன் முக கவசம் அணிவது மற்றும் பிறரை தொடுவது உள்ளிட்ட உடல் வழி தொடர்புகளை தவிர்க்கவும் வழிபட்டாளர்கள் பின்பற்றவும் அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.