அமீரகத்தின் மற்ற பகுதிகளில் வசித்துக்கொண்டு துபாயில் பணிபுரிபவர்கள் கவனத்திற்கு..??
கடந்த சில மாதங்களாக ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வந்த தேசிய சுத்திகரிப்பு திட்டத்தின் நேரமானது ஈத் விடுமுறைக்கு பின்னர் துபாயில் மட்டும் மாற்றியமைக்கப்படுவதாக இரு தினங்களுக்கு முன்பு துபாய் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு நேற்று (மே 27) முதல் சுத்திகரிப்பு திட்டத்திற்கான புதிய நேரம் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி, இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையிலும் துபாய் நகரம் முழுவதும் சுத்திகரிப்பு திட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் இந்த நேரங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் தவிர்த்து அமீரகத்தின் மற்ற பகுதிகளான அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், புஜைரா, ராஸ் அல் கைமா, உம் அல் குவைன் ஆகிய இடங்களில் தேசிய சுத்திகரிப்பு திட்ட நேரத்தில் எந்த வித மாற்றமும் இல்லாமல் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையிலும் மக்கள் நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பகுதிகளில் வசிக்கக்கூடிய அமீரகவாசிகளில் துபாயில் பணிபுரிவோர் வேலை நிமிர்த்தமாக 8 மணிக்கு பின்னரும் பணிபுரிவோராயின், அவர்கள் அனைவரும் அலுவலக ஐடி அல்லது பணிபுரிவதற்கான நிறுவனத்தின் அனுமதி கடிதம் உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மற்ற பகுதிகளின் காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஷார்ஜா காவல்துறைத் தளபதி மேஜர் ஜெனரல் சைஃப் அல் சிரி அல் ஷம்சி கூறுகையில், “ஷார்ஜாவை இருப்பிடமாக கொண்டு துபாயில் பணிபுரியும் ஊழியர்கள், சுத்திகரிப்பு நேரங்களில் பணியில் இருந்து வீடு திரும்ப நேர்ந்தால் அவர்களுக்கு எந்தவிதமான அபராதமும் இருக்காது. எனினும் துபாயில் பணிபுரிபவர்கள் துபாயில் வேலை செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க பணி அனுமதி, தொழிலாளர் அட்டை அல்லது பிற அதிகாரப்பூர்வ ஆவணங்களை காவல் துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் துபாயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் மேஜர் ஜெனரல் அல் ஷம்ஸி சுட்டிக்காட்டியுள்ளார். துபாயை தவிர்த்து மற்ற பகுதிகளில் பணிபுரிபவர்களுக்கு இது பொருந்தாது எனவும் குறிப்பிட்டுள்ளார். விதி மீறல்களைத் தவிர்ப்பதற்காக அதிகாரிகள் வகுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து சமூக உறுப்பினர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
துபாயில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்கள் ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பகுதிகளில் தங்களின் குடும்பத்தினரோடு வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.