ஓமான் : இந்த வருடத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழப்பு..!! இந்தியர்களே அதிகம் என தகவல்..!!

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமான் நாட்டில், இந்த ஆண்டு மட்டும் 27,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஓமானில் வேலை இழந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வேலையிழந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்த வேலையிழப்பிற்கான சரியான காரணத்தை புள்ளிவிவர தகவல்களுக்கான தேசிய மையம் குறிப்பிடவில்லை, ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியில் ஓமான் நாட்டில் 1.67 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருந்த நிலையில் மார்ச் மாதத்தில் 1.66 மில்லியனாகவும், ஏப்ரல் மாதத்தில் 1.65 மில்லியனாகவும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மே மாதத்திற்கான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓமானில் ஏற்பட்டுள்ள இந்த வேலையிழப்பிற்கு கொரோனா பாதிப்பு ஒரு முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து ஓமான் நாட்டின் பொருளாதார ஆய்வாளர் அல் கருசி கூறுகையில், ” வேலையிழந்த தொழிலாளர்களில் 80 சதவிகிதத்தினர் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 20 சதவிகிதத்தினர் சாதாரண வேலைவாய்ப்பு சரிசெய்தல் காரணமாக வேலையிழந்துள்ளனர் என்று நான் கருதுகிறேன். வரவிருக்கும் மாதங்களில் ஓமான் நாட்டில் தற்பொழுது இருக்கும் வெளிநாட்டவர்களின் அதிகமானோர் வேலை இழக்க நேரிடும் என்று நாங்கள் கணிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
“வேலை இழந்து வரும் இந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் அரசாங்க ஒப்பந்தங்களை பெரிதும் நம்பியுள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள். எண்ணெய் விலைகள் குறைவு மற்றும் தொற்றுநோயால், அரசாங்கம் இந்த பற்றாக்குறையை குறைப்பதற்கான அரசாங்கத்தின் செலவினங்களை தொடர்ந்து குறைக்கும்” என்று நிதி ஆய்வாளர் அப்துல்லா அல் பாஹ்மி கூறினார்.
ஓமானில் உள்ள பல உயர்மட்ட தனியார் வணிக நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில், தொற்றுநோய்களின் சவால்களால் வெளிநாட்டினை சேர்ந்த தொழிலாளர்களை நீக்கம் செய்வதில் தனியார் நிறுவனங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன. தேசிய விமான நிறுவனமான ஓமான் ஏர் நிறுவனத்தை கட்டுப்படுத்தும் ஓமான் ஏவியேஷன் குரூப் போன்ற அரசு அமைப்புகளும் இதேபோன்ற அறிக்கையை கடந்த மாதம் வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைகின்ற காரணத்தால் வரும் காலங்களில், அதிகமான வெளிநாட்டவர்கள் வேலை இழக்க நேரிடும் என்றும் மற்ற ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு, ஓமான் தனியார் துறைக்கு 250 மில்லியன் ரியால் (2.4 பில்லியன் திர்ஹம்) மதிப்புள்ள ஒப்பந்தங்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு எண்ணெய் விலையின் வீழ்ச்சி அனைத்து ஒப்பந்தங்களையும் அரசாங்கம் நிறுத்துவதற்கு வழிவகை செய்துள்ளது. இந்த ஆண்டு ஓமானின் சராசரி எண்ணெய் விலை பீப்பாய்க்கு 35 டாலராக இருக்கின்றது. இது 2019 ல் ஒரு பீப்பாய்க்கு 64 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் எண்ணெய் விலை 58 டாலரை அடிப்படையாகக் கொண்டது. இது இந்த ஆண்டு 2.5 பில்லியன் ரியால்களின் பற்றாக்குறையை மதிப்பிட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில், செலவினங்களை 10 சதவீதமாகவும் , பின்னர் கூடுதலாக 5 சதவீதமாகவும் குறைக்க அரசாங்கம் அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.