துபாய் தவிர்த்து அமீரகத்தின் பிற பகுதிகளுக்கான தேசிய சுத்திகரிப்பு நேரம் மாற்றியமைப்பு..!!
கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த சுத்திகரிப்பு பணிகளின் நேரம் நாளை முதல் மீண்டும் மாற்றியமைக்கப்படுவதாக அமீரக அரசு இன்று அறிவித்துள்ளது. ரமலான் மாதங்களில் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையிலும் மேற்கொள்ளப்பட்டு வந்த சுத்திகரிப்பு பணியானது ஈத் விடுமுறை முடிந்தபின் இரவு 8 மணியிலிருந்து காலை 6 மணி வரை என மாற்றியமைக்கப்பட்டது.
ஈத் விடுமுறைக்கு பின்னர் துபாயில் மட்டும் சுத்திகரிப்பிற்கான நேரம் இரவு 11 மணியிலிருந்து தொடங்கி காலை 6 மணி வரையிலும் தொடரும் என துபாயின் மகுட இளவரசரும், நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தலைமையிலான கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டது. எனினும் அமீரகத்தின் மற்ற நகரங்களில் தேசிய சுத்திகரிப்பு நேரம் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமீரக அரசின் சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவரும் தேசிய சுத்திகரிப்பு பனியானது நாளை (மே 30) முதல் இரவு 10 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரையிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான நேரம் வழங்கும் பொருட்டும், அத்தியாவசிய செயல்பாடுகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுகாதார அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்சிஇஎம்ஏ) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் இந்த தேசிய சுத்திகரிப்பானது துபாய் தவிர்த்து அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இரவு 10 மணியிலிருந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்பொழுது வணிக நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தளர்வு, இயல்பு நிலைக்கு திரும்புதல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கியமான துறைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் சுத்திகரிப்பிற்கான நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்தகங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி…
உணவுப்பொருட்கள் விற்பனை நிலையங்கள், கூட்டுறவு சங்கங்கள், மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகங்களில் கொரோனாவிற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் என்சிஇஎம்ஏ மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
MoHAP, MoI, NCEMA: National Disinfection Programme to start from 10 PM to 6 AM from Saturday#WamNews https://t.co/yWYAtN3Oa5
— WAM English (@WAMNEWS_ENG) May 29, 2020