அமீரக செய்திகள்

அமீரகத்தில் இறப்பைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் என்ன? இறந்தவரின் உடலை தாய் நாட்டிற்குக் கொண்டு செல்ல என்னென்ன செயல்முறைகளை முடிக்க வேண்டும்? உங்களுக்கான முழு வழிகாட்டி இங்கே….

ஐக்கிய அரபு அமீரகத்தில் உங்களின் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் போன்ற உங்களுக்கு நெருக்கமானவர்களின் மரணம் ஏற்படும்போது, ​​தேவையான சம்பிரதாயங்களை எவ்வாறு முடிப்பது என்பதை நீங்கள் அறிந்திருப்பது அவசியம். எனவே, அமீரகத்தில் ஒரு மரணத்தை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

படி 1: மரணத்தை அறிவித்தல்

அரசு மருத்துவமனையைத் தவிர வெளியே ஒரு தனியார் மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ , அமீரகத்தில் வேறு எங்கு மரணம் நிகழ்ந்தாலும், 999 என்ற எண்ணிற்கு உடனடியாக காவல்துறையை அழைத்து, சம்பவம் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இதனையடுத்து காவல்துறையினர் முதல் இறப்பு அறிக்கையை பூர்த்தி செய்து இறந்தவரை அரசு சவக்கிடங்கிற்கு எடுத்துச் செல்வார்கள்.

மாறாக, மருத்துவமனையில் ஒருவர் உயிரிழக்கிறார் என்றால், காவல்துறை அதிகாரிகளே முதல் இறப்பு அறிக்கையை பூர்த்தி செய்து இறந்தவரை அரசு சவக்கிடங்கிற்கு மாற்றுவார்கள். மேலும், சவக்கிடங்கில் உள்ள அதிகாரிகள் இறப்பு சான்றிதழ் அறிவிப்பை வெளியிடுவார்கள்.

குறிப்பாக, இறப்புச் சான்றிதழ் அறிவிப்பில் காவல்துறை முத்திரையிடப்பட வேண்டும். அதன் பிறகு, தடையில்லாச் சான்றிதழை (No objection certificate -NOC) வழங்குவார்கள். அதேசமயம், உடலை உறவினரிடம் கொடுப்பதற்கும், இறந்தவரை அவரது சொந்த நாட்டிற்கு கொண்டு செல்ல விரும்பினால், பிணவறையில் எம்பாமிங் செய்வதற்கும் தனித்தனி NOCகள் தேவைப்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

படி 2: இறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தல்

காவல்துறையிடம் இருந்து NOC யைப் பெற்றதும், நீங்கள் வசிக்கும் எமிரேட்டில் உள்ள சுகாதார ஆணையத்தின் மூலம் இறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த வகையில், துபாய் சுகாதார ஆணையம் (DHA), அபுதாபி சுகாதாரத் துறை (DOH) அல்லது சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகம் (MOHAP) ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம்.

துபாய் சுகாதார ஆணையம் (DHA)

ஒருவர் எமிரேட்டின் பொது மருத்துவமனையில் உயிரிழந்தால், நேரடியாக மருத்துவமனையிலேயே இறப்புச் சான்றிதழைப் பெறலாம். ஆனால், ஒரு தனியார் மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ மரணம் ஏற்பட்டால், 800 342 என்ற DHA ஹாட்லைனை தொடர்பு கொள்ள வேண்டும்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து, சுகாதார விதிமுறைகள் என்ற விருப்பத்திற்கு எண் ‘2’ ஐ அழுத்தவும். இதனையடுத்து, இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்கான செயல்முறையுடன் கால் சென்டர் முகவர் உங்களுக்கு வழிகாட்டுவார்.

அபுதாபி சுகாதாரத் துறை (DOH)

  • நீங்கள் அபுதாபியில் இறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டுமெனில், அபுதாபி அரசாங்க சேவை தளமான https://www.tamm.abudhabi/en/life-events/individual/DeceasedInheritance/Deceased/RequesttoManageDeathCertificate ஐப் பார்வையிடலாம்.
  • முதலில் ‘Start’ என்பதைக் கிளிக் செய்து, உங்கள் UAE PASS-ஐப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
  • அடுத்து, ‘individual’ என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் உங்களை ஒரு தனிநபராகப் பதிவு செய்யுங்கள். நீங்கள் UAE PASS-ஐப் பயன்படுத்தி உள்நுழையும்போது இந்த விவரங்கள் தானாகவே நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அதன் பிறகு, ‘Request for Issuing Death Certificate’ என்பதை டாஷ்போர்டில் தேர்ந்தெடுக்கவும்.
  • அடுத்தபடியாக, இறந்தவரின் பதிவு எண் (Qaid எண்) மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, ‘Validate’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • மேலும், தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
  • பின்னர், ‘Request certificate’ என்பதைக் கிளிக் செய்து, சான்றிதழை வழங்க விரும்பும் மொழியையும் (அரபு அல்லது ஆங்கிலம் அல்லது இரண்டும்) வழங்குவதற்கான முகவரி விவரங்களையும் தேர்ந்தெடுக்கவும்.
  • இறுதியாக, சேவைக்கான கட்டணம் 50 திர்ஹம்களை செலுத்தவும்.

சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகம் (MOHAP)

  • அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://mohap.gov.ae/ ஐப் பார்வையிட்டு ‘Services’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பின்னர், ‘Individual services’ என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தேடல் பட்டியில் (search bar) ‘Issue of a death certificate’ என்பதைக் கண்டுபிடித்துத் தேர்ந்தெடுக்கவும்.
  • ‘Start service’ என்பதைக் கிளிக் செய்து, UAE PASS-ஐப் பயன்படுத்தி உள்நுழையவும்.
  • அதனையடுத்து, ‘death certificates’ என்பதற்குக் கீழ் ‘issue of a death certificate’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதன் பிறகு, இறந்தவரின் பதிவு எண் (Qaid எண்) மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, சான்றிதழ் விவரங்களைக் கண்டறியவும்.
  • அடுத்தபடியாக, ‘Search’ என்பதைக் கிளிக் செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும்.
  • மேலும், ‘Request certificate’ என்பதைக் கிளிக் செய்யவும். எந்த மொழியில் சான்றிதழைப் பெற விரும்புகிறீர்கள் என்பதை (அரபு அல்லது ஆங்கிலம் அல்லது இரண்டும்) தேர்ந்தெடுத்து முகவரி விவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  • கடைசியாக, 60 திர்ஹம் சேவைக் கட்டணத்தைச் செலுத்தவும்.

அமீரகத்தின் சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் படி, உங்கள் விண்ணப்பம் ஒரு வேலை நாளுக்குள் செயலாக்கப்படும். மேலும் விபரங்களுக்கு 800 111 11 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது [email protected] என்ற இ-மெயில் முகவரியில் MOHAP ஐ தொடர்பு கொள்ளலாம்.

இறப்புச் சான்றிதழ் வெளியுறவு அமைச்சகத்தால் (Ministry of Foreign Affairs-MOFA) சான்றளிக்கப்படுதல்:

மேற்கூறிய வழிமுறைகளையடுத்து, இறந்தவரின் உடலை இறுதி சடங்குகளுக்காக அவர்களின் சொந்த நாட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்பினால், நீங்கள் பெறும் இறப்புச் சான்றிதழை வெளியுறவு அமைச்சகம் (MOFA) சான்றளிக்க வேண்டும்.

இதற்கு நீங்கள் நேரடியாக அமைச்சகத்தின் இணையதளம் மூலமாகவோ அல்லது சான்றளிப்பு சேவை வழங்குநர் மூலமாகவோ ஆன்லைனில் சான்றளிப்பைப் பெறலாம். வெளியுறவு அமைச்சகம் சான்றளித்தல் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

படி 4: விசாவை ரத்து செய்தல்

விசாவை ரத்து செய்வதற்கு, இறந்தவர் வசித்த எமிரேட்டின் இயற்கைமயமாக்கல் மற்றும் குடியிருப்பு துறைக்கு (Department of Naturalisation and Residency) ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், மரணத்தை பதிவு செய்வதற்கான செயல்முறையானது ஒவ்வொரு எமிரேட்டிலும் மாறுபடும் மற்றும் இறந்தவரின் மதம் மற்றும் குடியிருப்பு நிலையைப் பொறுத்து மாறுபடும் என்று கூறப்படுகிறது.

படி 5: இறுதி சடங்குகள்

அமீரகத்தில் உள்ள இறந்தவரின் நாட்டின் தூதரகத்தைத் தொடர்புகொண்டு அந்த நபரின் மரணம் குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பது அவசியம். அமீரக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, u.ae, இறந்த வெளிநாட்டினரை அமீரகத்தில் தகனம் செய்யலாம் அல்லது புதைக்கலாம் அல்லது அவர்களின் உடல்கள் தேவையான ஆவணங்களைக் காட்டுவதன் மூலம் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படலாம்.

இறந்தவரின் உடலை அவரது சொந்த நாட்டிற்கு விமானத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்னும் போது, இறந்தவரின் தூதரகத்திடம் இருந்து NOC சான்றிதழைப் பெற வேண்டும். அத்துடன் டிப்ளோமேடிக் மிஷன், பாஸ்போர்ட்டை ரத்து செய்து, சொந்த நாட்டில் மரணத்தை பதிவு செய்ய வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!