அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 4 மாத குழந்தை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகவும் சிறிய வயதுடைய கொரோனா நோயாளியாகிய நான்கு மாத எகிப்திய பெண் குழந்தை ஏப்ரல் மாதத்தில் கொரோனாவிற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் தற்பொழுது குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
துபாயில் உள்ள அல் ஸஹ்ரா மருத்துவமனையில் (Al Zahra Hospital) அனுமதிக்கப்பட்ட 4 மாத குழந்தையானது மூன்றாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட கொரோனாவிற்கான பரிசோதனையில் எதிர்மறை முடிவு வந்ததை தொடர்ந்து அவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அந்த குழந்தையின் பெற்றோர் தங்களது 15 வயதுடைய மூத்த மகனுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்ததையடுத்து, அக்குழந்தையை கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதற்கிடையில், அக்குழந்தையின் பெற்றோர் இருவர் மற்றும் குழந்தையின் மற்றுமொரு உடன்பிறப்பு ஆகிய அனைவரும் கொரோனாவிற்கான பரிசோதனை மேற்கொண்டதில் எதிர்மறை முடிவு வந்துள்ளது.
மூத்த மகனுக்கு ஏற்பட்ட அறிகுறிகளை போலவே அக்குழந்தைக்கும் லேசான காய்ச்சல் மற்றும் இருமல் வரத் தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து சோதனை முடிவில் அக்குழந்தைக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது பற்றி குழந்தையின் அம்மா கூறுகையில், “குழந்தைக்கு 4 மாதங்கள் மட்டுமே இருப்பதால் நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம். கொரோனா அறிகுறி இருப்பதால் அவள் தனிமையில் வைக்கப்பட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். துபாயில் உள்ள அல் சஹ்ரா மருத்துவமனை என்னை அவளுடன் மற்றும் என் மூன்று வயது குழந்தையுடன் மருத்துவமனையில் தங்க அனுமதித்தது. குழந்தைகளுக்கு COVID-19 நோய்த்தொற்று ஏற்படுவது என்பது பெற்றோருக்கு ஒரு பயமுறுத்தும் விஷயம். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் எங்களின் பதட்டத்தை குறைக்கவும், குழந்தைக்கு சிகிச்சை மேற்கொண்ட காலங்களில் எங்களுக்கு ஆதரவு அளிக்கவும் மிகவும் உதவிகரமாக இருந்திருக்கிறார்கள், ”என்று கூறினார்.
குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் டாக்டர் யாசர் எல் நக்லவி கூறுகையில், “குழந்தை கொரோனாவிற்கான லேசான அறிகுறிகளுடன் வந்து மருத்துவமனையில் தங்கியிருந்த காலம் முழுவதும் குழந்தையின் உடல்நிலை சீராக இருந்தது” என்று கூறியுள்ளார்.
மேலும் இவர் கூறுகையில், “கொரோனா பரவ ஆரம்பித்த சமயங்களில், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இல்லை என்று தோன்றியது. இருப்பினும், தற்பொழுது கொரோனா பாதிப்பு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது. இந்த கட்டத்தில் குழந்தைகள் பெரியவர்களை போலவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் அதே அளவிலான ஆபத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது, ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்களின் அறிகுறிகள் லேசானதாக இருக்கின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
source : Gulf News