இந்தியாவிற்கு செல்ல சிறப்பு விமானம் இயக்கும் ஃப்ளைதுபாய்..!! டிக்கெட் முன்பதிவு குறித்த அறிவிப்பு வெளியீடு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை செய்யப்பட்டிருந்த விமான போக்குவரத்து மற்றும் விமான நிலையங்கள் மீண்டும் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, துபாயை மையமாக கொண்டு இயங்கும் பட்ஜெட் கேரியர் விமான நிறுவனமான ஃப்ளைதுபாய், சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாமல் அமீரகத்தில் சிக்கியுள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கு சிறப்பு விமானங்களை இயக்க இருப்பதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் படி இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான், பல்கேரியா, பின்லாந்து, ஜார்ஜியா, கிர்கிஸ்தான், ருமேனியா, செர்பியா மற்றும் உக்ரைன் ஆகிய 11 நாடுகளை சேர்ந்த ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்கள், திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் கீழ் இயக்கப்படும் சிறப்பு விமானத்திற்கான டிக்கெட்டிற்கு ஃப்ளைதுபாய் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இது குறித்து ஃப்ளைதுபாய் விமான நிறுவனத்தின் சார்பாக கூறியதாவது, “ஃப்ளைதுபாய் நெட்வொர்க் முழுவதும் உள்ள நாடுகளால் விமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாங்கள் அவர்களின் வீட்டிற்கு பாதுகாப்பாக திரும்பிச் செல்ல எங்களால் இயன்ற உதவிகளை செய்ய நாள் முழுவதும் பணியாற்றி வருகிறோம்.”
“மேலே கூறப்பட்டுள்ள நாடுகளின் குடிமக்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த சிறப்பு விமானத்தில் முன்பதிவு செய்ய உரிமை உண்டு. டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகத்தை தொடர்புகொண்டு சரிபார்த்துக்கொள்ளவும். தூதரகம் அனுமதி அளித்த பின்னரே டிக்கெட் முன்பதிவு செய்யவும்” என்று ஃப்ளைதுபாய் விமான நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளது.
மேலும் சிறப்பு விமானங்கள் அனைத்தும் அமீரகத்தில் சிக்கியிருப்பவர்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு மட்டுமே என்றும், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் அல்லது வருகை தரும் மேற்கூறிய நாடுகளின் குடிமக்களை ஏற்றிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் ஃப்ளைதுபாய் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருப்பி அனுப்பும் நடவடிக்கை மூலம் இயக்கப்படும் அனைத்து விமானங்களும் துபாயில் இருந்து புறப்படும் என்றும், எகனாமிக் வகுப்பில் ஒரு வழி பயணத்திற்கான கட்டணங்களை வழங்க இருப்பதாகவும் விமான நிறுவனம் கூறியுள்ளது.
சிறப்பு விமானத்தில் பயணிப்பவர்கள் லக்கேஜ்ஜாக 20 கிலோ வரையிலும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என்றும், விமான கேபினிற்குள் கொண்டு செல்லப்படும் ஹாண்ட் லக்கேஜ்ஜாக லேப்டாப், ஹாண்ட்பேக், பிரீஃப்கேஸ் அல்லது குழந்தை பொருட்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்காக இயக்கப்படும் சிறப்பு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நிபந்தனைகள்…
- அனைத்து சிறப்பு விமானங்களும் துபாய் சர்வதேச விமான நிலையம் – டெர்மினல் 2 விலிருந்து இயங்கும்.
- அனைத்து விமானங்களும் அரசாங்க ஒப்புதல்களுக்கு உட்பட்டவை மற்றும் ஒப்புதல்கள் பெறப்பட்டிருந்தால் மட்டுமே இயங்கும்.
- விமானத்தின் போது எந்த உணவும் வழங்கப்பட மாட்டாது. ஒரு சிற்றுண்டி பெட்டி மட்டும் வழங்கப்படும்.
- விமான பயண தேதி மாற்றம் செய்யப்பட்டால் அல்லது ரத்து செய்யப்பட்டால் எந்த அபராதமும் விதிக்கப்படமாட்டாது.
- ரத்து செய்யப்பட்ட விமான பயணத்திற்கான டிக்கெட் பணத்தைத் திரும்பப்பெறுதல் என்பது ஒரு ஃப்ளைதுபாய் வவுச்சர் மூலமாகவே வழங்கப்படும்.
- முன்பதிவு செய்த விமானத்தில் நீங்கள் பயணம் செய்யவில்லை என்றால், பயண தேதியை மாற்றவோ அல்லது அதற்கான டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறவோ முடியாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவும்.