குவைத் : தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றவர்களின் ரெசிடென்ஸ் விசாக்களை புதுப்பித்துக் கொள்ள புதிய வசதி..!!
குவைத் நாட்டின் உள்துறை அமைச்சகம், அந்நாட்டில் தற்காலிக குடியிருப்பில் இருக்கும் குடியிருப்பாளர்கள் தங்களின் ரெசிடென்ஸ் விசாவினை வழக்கமான ரெசிடென்ஸ் விசாவாக மாற்றிகொள்ளவதற்கு ஏதுவாக ஆன்லைன் சேவையை தொடங்கியுள்ளது.
இதற்கு முன்னதாக, கொரோனாவினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளின் காரணமாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டதால் தங்களுடைய ரெசிடென்ஸ் அனுமதியை (residence permit) விசாவாக மாற்ற முடியாமல் காலாவதியான ரெசிடென்ஸ் பெர்மிட் வைத்திருந்த குடியிருப்பாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் வரும் ஆகஸ்ட் 31 ம் தேதி வரை அவர்களுக்கு தற்காலிக குடியிருப்பை வழங்கி குவைத்தில் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி அளித்திருந்தது.
இதன்படி, சுமார் 350,000 குடியிருப்பாளர்களுக்கு தற்காலிக குடியிருப்பு வழங்கப்பட்டதாக கணக்கெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்பொழுது தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய ஆன்லைன் சேவையின் மூலமாக குடியிருப்பாளர்கள் தங்களின் ரெசிடென்சியை புதுப்பித்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சேவையை பெற உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (www.moi.gov.kw) சென்று அங்கு கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி ரெசிடென்ஸ் விசாவினை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.