விசிட் மற்றும் சுற்றுலா விசாவில் துபாய் வர புதிய நிபந்தனைகள்..!! கொரோனா தொற்று அறியப்பட்டால் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அமீரகத்திற்கும் பிற நாடுகளுக்கும் இடையேயான விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா அல்லது விசிட் விசா வைத்திருந்தவர்கள் மற்றும் அமீரக குடியிருப்பாளர்கள் உட்பட எவரும் அமீரகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் அமீரக அரசால் மேற்கொள்ளப்பட்ட திருப்பி அனுப்பும் நடவடிக்கை மூலம் அமீரக குடிமக்களும் மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்களும் அமீரகத்திற்கு திரும்ப அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு, கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் அனைத்து அமீரக குடியிருப்பாளர்களும் நாடு திரும்புவதற்காக ICA ஸ்மார்ட் சிஸ்டம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் எனவும், ICA விடம் இருந்து அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டு அதன் படி பலரும் வெளிநாடுகளிலிருந்து அமீரகம் வந்த வண்ணம் உள்ளனர். எனினும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் அமீரகத்திற்கு வருகை தர அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை தொடர்ந்து, சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் வருகை தரும் வெளிநாட்டவர்கள் அடுத்த மாதம் ஜூலை 7 ஆம் தேதி முதல் துபாய் வர அனுமதிக்கப்படுவார்கள் என துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்ச குழு நேற்று (ஜூன் 21) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் துபாய் வரும் சுற்றுலாவாசிகள், துபாய் வருவதற்கு முன்னரும் வந்தடைந்த பின்னரும் பின்பற்றவேண்டிய புதிய வழிமுறைகளையும், நிபந்தனைகளையும் உச்ச குழு வெளியிட்டுள்ளது.
துபாய் வருகை தரும் பயணிகளுக்கான நிபந்தனைகள்…
- ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்குள் நுழைவதற்கான “நுழைவு விசா” (visit or tourist) வைத்திருக்க வேண்டும்.
- பயணம் மேற்கொள்பவர்க்கு சர்வதேச மருத்துவ காப்பீடு (International Coverage) இல்லாத நிலையில், பயணத்திற்கு முன் மருத்துவ பயணக் காப்பீடு (Medical Travel Insurance) இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவ சிகிச்சையின் அனைத்து செலவுகளையும் தான் ஏற்று கொள்கிறேன் என கையெழுத்திட வேண்டும்.
- பயணிக்கும் நபர்கள் தங்கள் நாடுகளிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் தங்களுக்கு கொரோனாவிற்கான அறிகுறிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த ஒரு சுகாதார அறிவிப்பு படிவத்தை (Health Declaration Form) பூர்த்தி செய்ய வேண்டும்.
- சுற்றுலாப் பயணிகள் தங்களது அனைத்து விவரங்களையும் COVID-19 DXB எனும் அப்ளிகேஷனில் (Mobile App) பதிவு செய்ய வேண்டும்.
பயணிகள் புறப்படும் நாடுகளில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள்…
- பயணம் செய்பவர் கொரோனாவிற்கான பரிசோதனை செய்து அதில் எதிர்மறையான முடிவை (Negative Result) கொண்டிருக்க வேண்டும். மேலும் அந்த பரிசோதனை முடிவு 96 மணி நேரங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாதவர்களுக்கு துபாய் விமான நிலையம் வந்தடைந்ததும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
- புறப்படுவதற்கு முன்னர் தங்களின் உடல் நிலை குறித்த முழுமையான தகவல்களை சுகாதார அறிவிப்பு படிவத்தில் நிரப்ப வேண்டும்.
- கொரோனாவிற்கான அறிகுறிகள் தென்படும் பயணிகளை பயணம் செய்வதற்கு மறுப்பு தெரிவிக்க விமான நிறுவனங்களுக்கு உரிமை உண்டு.
பயணிகள் துபாய் வந்தடைந்தவுடன் துபாய் விமான நிலையங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள்…
- கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் வருகை தரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
- வருகை தரும் அனைத்து பயணிகளின் உடல் வெப்பநிலை, வெப்ப திரையிடல் கருவிகள் (Thermal Screening) மூலம் கணக்கெடுக்கப்படும்.
- புறப்படுவதற்கு முன்பான கொரோனா சோதனையில் எதிர்மறையான முடிவை பெற்ற பயணி எவருக்கேனும், துபாய் வந்தடைந்த பின்னர் கொரோனாவிற்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
பயணிகள் துபாய் விமான நிலையங்களை விட்டு வெளியேறுவதற்கான நடைமுறைகள்…
- சுற்றுலா விசாவில் வருகை தருபவர்கள் COVID-19 DXB அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
- கொரோனாவிற்கான பரிசோதனை மேற்கொண்டவர்களில் நேர்மறையானா முடிவை (Positive Result) பெரும் பயணிகள் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலில் உட்படுத்தப்படுவர்.
- கொரோனாவிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, இரண்டு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் தவறாமல் கைகளை நன்கு கழுவுவது உள்ளிட்ட விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.
கொரோனா பரிசோதனையில் நேர்மறையான முடிவை பெரும் சுற்றுலா பயணிகள்…
- நேர்மறையான முடிவை கொண்ட சுற்றுலா பயணிகள் அனைவரும் மையங்களில் தனிமைப்படுத்தல், வீட்டு தனிமைப்படுத்தல் அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்படுவது உள்ளிட்ட துபாயின் COVID-19 கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தால் வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு கண்டிப்பாக இணங்க வேண்டும்.
Under the directives of @HHShkMohd, and follow-up of @HamdanMohammed Supreme Committee of Crisis and Disaster Management announces new air travel protocols for #Dubai citizens, residents and visitors. pic.twitter.com/UZmT8UBwXs
— Dubai Media Office (@DXBMediaOffice) June 21, 2020