காலாவதியான ID கார்டு, டிரைவிங் லைசென்ஸ் மற்றும் பாஸ்போர்ட்டிற்கு அபராதம் இல்லை..!! ஓமான் காவல்துறை அறிவிப்பு..!!

ஓமான் நாட்டில் இருக்கக்கூடிய மக்களின் காலாவதியான ஐடிகள், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அபராதம் விதிக்காது என்று அந்நாட்டின் ராயல் ஓமான் காவல்துறை (Royal Oman Police, ROP) செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. ராயல் ஓமான் காவல்துறையின் வாடிக்கையாளர் சேவைகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் ஓமான் காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து ஓமான் காவல்துறை ROP இன் அதிகாரி ஒருவர் கூறுகையில், “அடையாள அட்டைகள், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பாஸ்போர்ட் காலாவதியானவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது, காவல்துறை தனது வாடிக்கையாளர் சேவைகளை மீண்டும் திறக்கப்படும் போது இவை புதுப்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பொது பூங்காக்களையும் மூடுவது, திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகள் போன்ற அனைத்து பொதுக் கூட்டங்களையும் நிறுத்துவது, மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கொரோனா பரவலுக்கு எதிராக ஓமான் அரசாங்கம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.