அமீரக செய்திகள்

கோடை வெயிலில் ஏற்படும் வாகனத் தீ அபாயத்தைத் தடுக்க 10 டிப்ஸ்!! அபுதாபி காவல்துறை பிரச்சாரம்….

அமீரகம் முழுவதும் கோடை வெயிலானது மக்களை சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றது. 50 டிகிரி செல்சியஸைத் தொடும் கடுமையான வெப்பநிலைகளுக்கு மத்தியில், குடியிருப்பாளர்கள் நேரடியாக சூரியக் கதிர்வீச்சில் படுமாறு இருப்பதை தவிர்க்குமாறு அமீரக மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதுபோல, வாகனங்களில் வெளியே செல்லும் ஓட்டுநர்கள், கொளுத்தும் வெயிலில் வாகனங்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு வாகன நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். பெரும்பாலும் கோடைகாலங்களில் வாகனங்களை பாதுகாக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஓட்டுநர்கள் புறக்கணிப்பதால், வாகன தீ விபத்துகள் ஏற்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகவே, அபுதாபி காவல்துறையின் ஜெனரல் கமாண்ட், “Safe Summer” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வாகன ஓட்டிகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கவும், குறிப்பாக கோடை மாதங்களில் வாகனங்களை முறையாகப் பராமரிப்பதில் கவனம் செலுத்தவும் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து கிரிமினல் எவிடென்ஸ் துறையில் உள்ள தீயணைப்புத் துறையின் தலைவர் மேஜர் டாக்டர் எங் அடெல் நாசிப் அல்-சக்ரி என்பவர் பேசுகையில், திரவ எரிபொருள், எண்ணெய்கள் போன்ற எரியக்கூடிய கூறுகள் உட்பட பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் போன்ற உள் கூறுகள், ஒழுங்காக பராமரிக்கப்பட்டு கையாளப்படாவிட்டால், அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, குடியிருப்பாளர்கள் தங்கள் வாகனங்களைத் தவறாமல் பராமரிக்கவும், பின்வரும் பாதுகாப்பான நடைமுறைகளைப் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

  • என்ஜின் கூலன்ட் அளவை சரிபார்ப்பது.
  • எண்ணெய் கசிவுகளைச் சரிபார்ப்பது.
  • கார் அமைப்பில் எலெக்ட்ரிக்கல் மற்றும் டெக்னிக்கல் கோளாறுகளை சரிபார்ப்பது.
  • டயர் அழுத்தத்தை சரிபார்ப்பது.
  • ஏர் கண்டிஷனிங் அமைப்புகளைச் சரிபார்த்தல், இது கடுமையான வெப்பத்தின் போது முக்கியமானது
  • என்ஜின் கூறுகளின் சரியான செயல்பாட்டை உறுதி செய்வது.
  • வாகனங்களிலிருந்து ஏதேனும் அசாதாரண வாசனை, புகை அல்லது எச்சரிக்கைகளை கண்காணிப்பது.
  • அளவுக்கு மீறிய சுமைகளை வாகனத்தில் ஏற்றாமல் சூடாவதைத் தவிர்க்கவும்.
  • எளிதில் தீப்பற்றக் கூடிய ஹேண்ட் சானிடைசர்கள், வாசனை திரவியங்கள் மற்றும் லைட்டர்கள் போன்றவற்றை கார்களில் வைக்கக் கூடாது.
  • மின் சாதனங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வெளிப்படுத்தாமல் இருப்பது

இவற்றுடன், எப்போதும் வாகனங்களில் தீயை அணைக்கும் கருவி மற்றும் முதலுதவி பெட்டியை வைத்திருப்பது அவசியம். மேற்கூறப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும், வழக்கமான வாகனப் பராமரிப்பில் ஈடுபடுவதன் மூலமும், ஓட்டுநர்கள் வாகனத் தீவிபத்து ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்கலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!