அமீரக செய்திகள்

UAE: ஹோட்டல் ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா சோதனை கட்டாயம்..!! புதிய வழிமுறைகள் வெளியீடு..!!

கொரோனாவின் பாதிப்புகளின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் தடை செய்யப்பட்டிருந்த ஹோட்டல்கள் மீண்டும் திறக்கப்படுவதை தொடர்ந்து, அனைத்து ஹோட்டல்களிலும் பின்பற்றப்பட வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Emergency Crisis and Disasters Management Authority) வெளியிட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை வெளியிடபட்டுள்ள இந்த புதிய வழிகாட்டுதல்களின் படி, ஹோட்டல்கள் திறக்கப்படுவதற்கு முன்பு ஹோட்டலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உண்டா இல்லையா என்பது சோதிக்கப்பட வேண்டும் என்றும் மேலும் 15 நாட்களுக்கு ஒருமுறை என மீண்டும் மீண்டும் சோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள்…

  • ஹோட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களின் உடல் வெப்பநிலையை அகச்சிவப்பு வெப்பமானி (infrared thermometer) மற்றும் வெப்ப கேமராவை (thermal camera) கொண்டு ஒவ்வொரு நாளும் பல முறை சோதிக்கப்பட வேண்டும்.
  • கொரோனா வைரஸ் அறிகுறிகளைக் காட்டும் எந்த விருந்தினரும் அல்லது பணியாளரும் ஹோட்டல்களில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • ஹோட்டல்களில் தங்கியிருக்கும் விருந்தினர்கள் ஒரு அறையை விட்டு வெளியேறுவதற்கும், அடுத்த விருந்தினர்கள் அதே அறையை பயன்படுத்துவதற்கும் இடையே 24 மணி நேர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
  • ஹோட்டல்களில் உணவகங்கள், கஃபேக்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள் மற்றும் கடற்கரைகள் போன்ற வசதிகள் குறைந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் செயல்படலாம்.
  • வாடிக்கையாளர்கள் ஹோட்டல்களில் நுழைவதற்கு முன்பு சோதிக்கப்பட்ட அவர்களின் வெப்பநிலை குறித்த விபரங்களை தன்னுடன் வைத்திருக்க வேண்டும்.
  • ஹோட்டல்களில் இருக்கும் உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படலாம்.
  • நான்கு பேர் ஒரே மேசையில் அமர்ந்து உணவருந்த அனுமதி உண்டு. ஒவ்வொரு மேசைக்கும் இடையே 2.5 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் உணவகங்களில் இருக்கக்கூடிய மெனுக்கள் சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும்.

கொரோனாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைளை உறுதி செய்ய தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும், வழிமுறைகளை பின்பற்றாத ஹோட்டல் நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசின் சார்பாக முன்பு கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!