அமீரக செய்திகள்

அபுதாபிக்குள் நுழைய கொரோனா நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் கட்டாயம்..!! அபுதாபி பேரிடர் குழு அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற நகரங்களான துபாய், ஷார்ஜா உள்ளிட்ட பிற பகுதிகளிலிருந்து வரும் அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் அபுதாபிக்குள் நுழைவதற்கு, கொரோனா நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் கட்டாயம் என்று அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் குழு இன்று அறிவித்துள்ளது. மேலும் அபுதாபிக்குள் நுழைவதற்கு 48 மணி நேரத்திற்குள்ளாக முடிவுகளைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் அபுதாபி பேரிடர் குழு தெரிவித்துள்ளது.

மேலும் கூறுகையில், கொரோனவிற்கான எதிர்மறை சோதனை முடிவுகளை AlHosn மொபைல் அப்ளிகேஷன் வாயிலாகவோ, அல்லது ஏதேனும் மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட குறுஞ்செய்தி அல்லது தேசிய ஸ்க்ரீனிங் மையத்திலிருந்து பெறப்பட்ட குறுஞ்செய்தியாகவோ காட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மேலும் தெரிவிக்கையில் ஏற்கனவே அமலில் இருக்கும் பிற பகுதிகளை சார்ந்த தொழிலாளர்கள் நுழைவது மீதான தடை தொடரும் என்றும், இந்த தடையிலிருந்து அஞ்சல் மற்றும் அனைத்து வகையான பொருட்களை ஏற்றி செல்லும் வாகன இயக்கத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அபுதாபிக்குள் வரும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் முக கவசங்களை அணிந்துகொள்வது மற்றும் வாகனங்களுக்குள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் பேரிடர் குழு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

“அமீரகத்தில் கொரோனா பரவுவதைத் தடுப்பதில் ஏற்பட்டுள்ள நேர்மறையான விளைவுகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்” கூறப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் ஜூன் 2 ஆம் தேதி அபுதாபி முழுவதும் தொடங்கப்பட்ட மிகப்பெரிய அளவிலான கொரோனா பரிசோதனை திட்டத்தை முன்னிட்டு அபுதாபிக்கும் பிற பகுதிளுக்கும் இடையேயான இயக்கம் முழுவதுமாக தடை செய்யப்பட்டிருந்தது. இரு வாரங்களுக்கு பிறகு ஜூன் 23 ஆம் தேதி முதல் அபுதாபி குடியிருப்பாளர்கள் அல் அய்ன் மற்றும் அல் தஃப்ரா பகுதிகளுக்கு இடையில் இயக்க அனுமதி இல்லாமல் பயணிக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது.

இருப்பினும் அபுதாபிக்கும் துபாய் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் இடையேயான இயக்க தடை தொடர்ந்து நீடித்து வந்தது. தற்போது இந்த இயக்க தடை நீடிக்கப்பட்டிருந்தாலும் அபுதாபி பேரிடர் குழு அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு உட்படுபவர்கள் மட்டுமே அபுதாபிக்குள் நுழைய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!