அபுதாபி : ஏர் இந்தியா அலுவலகம் தற்காலிகமாக இடமாற்றம்..!! நாளை முதல் டிக்கெட் விற்பனை புதிய வளாகத்தில் துவங்கும்..!!
அபுதாபியில் உள்ள கலீதியா பகுதியில் இயங்கி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டிக்கெட் முன்பதிவு அலுவலகம் தற்காலிகமாக மினா சையத்தில் அமைந்துள்ள இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தின் (ISC) வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ISC அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். மேலும் புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகம் நாளை (ஜூலை 10) முதல் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கொரோனாவிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செயல்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் இயக்கப்படும் விமானங்களுக்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஏர் இந்தியா விமான நிறுவன அலுவலகம் மூலமாகவோ பயண டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தூதரகம் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து அபுதாபியில் வசிக்கும் இந்தியர்கள் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்ய கலீதியாவில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகத்திற்கு விரைந்ததால், அப்பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து ISC.யின் கவுரவ பொதுச் செயலாளர் ஜோஜோ ஜே. அம்புகென் கூறுகையில், “டிக்கெட் முன்பதிவு செய்ய ஏராளமானோர் கூடியதால் கலீதியாவில் இயங்கிவந்த அலுவலகத்தில் வந்தே பாரத் மிஷன் டிக்கெட் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் அதிகளவில் மக்கள் கூடுவது அண்டை வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு ஏராளமான சிரமங்களை ஏற்படுத்துகிறது. மேலும் இதனால் இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது. இதனால் ஏர் இந்தியா அலுவலகத்தை தற்காலிகமாக எங்கள் வளாகத்திற்கு மாற்றி கொள்ள ஏர் இந்தியா அதிகாரிகளிடமிருந்து கோரிக்கை பெறப்பட்டது. அதனை தொடர்ந்து ஏர் இந்தியாவின் டிக்கெட் முன்பதிவு வழங்கும் சேவைகள் நாளை முதல் ISC வளாகத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே தற்காலிகமாக எங்களின் வளாகத்தை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாகவும் இந்திய சமூக மற்றும் கலாச்சார மையம் தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் நான்காம் கட்ட திருப்பி அனுப்பும் நடவடிக்கை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், கூடுதலாக 104 விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இன்று அறிவிக்கப்பட்டிருந்ததும், ஜூலை 15 முதல் ஜூலை 31 வரையிலான நாட்களில் இயக்கப்படவுள்ள இந்த விமானங்களில் 13 விமானங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.