அமீரக செய்திகள்

புதிதாக திறக்கப்பட்ட இரண்டு சாலைகளால் சீரான துபாய்-ஷார்ஜா போக்குவரத்து..!! SRTA ட்வீட்..!!

ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) இத்திஹாத் சாலை மற்றும் அல் தாவுன் பகுதியில் சமீபத்தில் இரண்டு புதிய சாலைகளைத் திறந்ததால், துபாய் மற்றும் ஷார்ஜா இடையேயான போக்குவரத்து தற்போது சீராகியுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது. மேலும், அல் தாவுன் பகுதியில் இருந்து துபாய் மற்றும் ஷார்ஜா எமிரேட்களை இணைக்கும் அல் நஹ்தா பாலத்தில் கூடுதலாக ஒரு புதிய பாதையை சேர்த்துள்ளதாகவும் ஆணையம் கூறியுள்ளது.

ஷார்ஜாவில் வசிக்கும் ஏராளமான குடியிருப்பாளர்கள் வேலைக்காக தினசரி துபாய்க்குச் சென்று வருவதால், ஷார்ஜா மற்றும் துபாயை இணைக்கும் அல் தாவுன் ஸ்ட்ரீட்டில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவிலான போக்குவரத்து நெரிசல் காணப்படும்.

எனவே, ஆணையத்தின் இந்த புதிய திட்டங்கள் அல் தாவுன், அல் கான் மற்றும் அல் மஜாஸ் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் இத்திஹாத் சாலை மற்றும் ஷார்ஜா ரிங் ரோடு நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் ஆகியோருக்கு மிகவும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, ஷார்ஜாவில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தும் வகையில், அல் தாவுன் சதுக்கத்தில் போக்குவரத்து நெரிசலை சீராக்க, அல் நஹ்தா பாலத்தில் 500 மீட்டர் நீளம் கொண்ட புதிய பாதையை சேர்த்துள்ளதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

அதேபோல், அல் இத்திஹாத் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வந்த போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தையும் SRTA நிறைவு செய்துள்ளது. இத்திட்டம் துபாய் ஷார்ஜா இடையே பயணிக்கும் பயணிகளின் திறனை அதிகரிப்பதோடு, போக்குவரத்து நெரிசலை எளிதாக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம், இத்திஹாத் சாலையை அல் மம்சாருடன் இணைக்கும் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்த கடந்த ஏப்ரல் முதல் அனுமதியளித்துள்ளது. இதற்கு முன்பு இந்த சாலையை பொது போக்குவரத்து மற்றும் டாக்ஸிகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவும் துபாய் ஷார்ஜா இடையேயான போக்குவரத்து சீராகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!