UAE : 25-ம் ஆண்டிற்கான வெள்ளி விழா கொண்டாட்டத்துடன் மீண்டும் துவங்க இருக்கும் குளோபல் வில்லேஜ்..!!
துபாயின் முன்னணி பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார இடங்களுள் ஒன்றான குளோபல் வில்லேஜ் (Global Village) வரும் அக்டோபர் மாதம் முதல் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் திறக்கப்படும் குளோபல் வில்லேஜானது அடுத்த வருடம் (2021) ஏப்ரல் வரை இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட குளோபல் வில்லேஜ் கொரோனாவின் பரவலினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளின் காரணமாக திட்டமிட்ட தேதிக்கு முன்பாகவே மார்ச் 15 ஆம் தேதி அன்று மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
துபாயில் இருக்கும் குளோபல் வில்லேஜ் உலகெங்கிலும் உள்ள ஷாப்பிங், உணவகம் மற்றும் பொழுதுபோக்கு அனுபவங்களுக்கான தனித்துவமான மற்றும் ஒருங்கிணைந்த திறந்தவெளி இடமாகும். 1997 ஆம் ஆண்டில் முதன் முதலில் தொடங்கப்பட்ட குளோபல் வில்லேஜ் துபாயில் இருக்கும் க்ரீக் பகுதியில் நடைபெற்றது. பின்னர் ஓட் மேத்தா (Oud Metha), துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி, என இடங்கள் மாறி 2005 ம் ஆண்டு முதல் நிரந்தரமாக ஒவ்வொரு ஆண்டும் ஷேக் முகமது பின் சையத் சாலையில் (Sheikh Mohammad Bin Zayed Road Exit 37) நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு, குளோபல் வில்லேஜ் தனது 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்வுகளை உள்ளடக்கி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
அதன் 25 வது ஆண்டு விழாவிற்காக குளோபல் வில்லேஜ், பார்வையாளர்களுக்கு 40,000 க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகள், நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளை வழங்கும் வகையிலும், அனைத்து பார்வையாளர்களையும் ஒரு உற்சாகமான பன்முக கலாச்சார சாகசத்திற்கு அழைத்துச் செல்லும் வகையிலும் திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளோபல் வில்லேஜ் ஏற்கனவே சீசன் 25 க்கான புதிய பதிவுகளை (Registration) ஏற்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குளோபல் வில்லேஜ் – 2020
நடைபெறும் இடம் : ஷேக் முகமது பின் சயீத் சாலை Exit 37.
செலவு : நுழைவுச் சீட்டுகளின் விலை 15 திர்ஹம்.
நேரம் :
சனிக்கிழமை : 4 மணி முதல் 12 மணி வரை
வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை : 4 மணி முதல் 1 மணி வரை