UAE : சென்னையில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானங்கள் இயக்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்..!!
துபாயை மையமாகக்கொண்டு இயங்கும் விமான நிறுவனமான எமிரேட்ஸ் விமான நிறுவனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 19) வெளியிட்ட அறிவிப்பில் சென்னை, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமான சேவைகளை வழங்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சிக்கி தவிக்கும் அமீரக குடியிருப்பாளர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் இந்த விமானங்களை ஜூலை 26 வரை இயக்கப்போவதாகவும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஜூலை 11 ம் தேதி இந்த விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கொச்சி, டெல்லி, மும்பை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இருந்து துபாய்க்கு ஜூலை 12 முதல் ஜூலை 26 வரை விமான சேவைகளை இயக்கும் என்று அறிவித்திருந்தது.
தற்பொழுது கூடுதலாக அறிவிக்கப்பட்ட நகரங்களையும் சேர்த்து மொத்தம் ஒன்பது இந்திய நகரங்களில் இருந்து ஜூலை 26 வரை துபாய்க்கு அமீரக குடியிருப்பாளர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கொச்சி, டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இருந்து துபாய்க்கும், துபாயில் இருந்து இந்த நான்கு நகரங்களுக்கும் விமான சேவைகளை வழங்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், பெங்களூர், அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவிலிருந்து துபாய் செல்லும் விமானங்கள் இந்தியாவில் இருந்து மட்டுமே பயணிகளை ஏற்றிச்செல்லும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் இருந்து துபாய்க்கு வரும் பயணிகள் GDRFA வின் அனுமதி பெற்றால் மட்டுமே இந்த விமானங்களில் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.