ரெசிடன்சி விசா காலாவதியான 40,000 குடியிருப்பாளர்கள் குவைத் திரும்ப புதிய விசா அவசியம்..!! விசா கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாகவும் தகவல்..!!
உலகளவில் ஏற்பட்ட கொரோனாவின் பாதிப்புகளினால் தற்போது வரையிலும் அமலில் உள்ள விமான போக்குவரத்து தடையின் காரணமாக, குவைத் நாட்டிற்கு திரும்ப முடியாத சுமார் 40,000 வெளிநாட்டை சேர்ந்த குவைத் குடியிருப்பாளர்கள், தங்களின் ரெசிடென்சி விசாக்களின் செல்லுபடியை இழந்துள்ளதாக குவைத் நாட்டின் குடியிருப்பு விவகாரங்களின் பொது நிர்வாகத்தின் தலைவர் ஹமாத் ரஷீத் அல் தவாலா இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
“புதிய நுழைவு அனுமதிக்கான விசாக்கள் இல்லாவிட்டால், ரெசிடன்சி விசா காலாவதியாகி இருப்பவர்களால் குவைத் நாட்டிற்கு திரும்ப முடியாது” என்றும் ரஷீத் அல் தவாலா கூறியுள்ளார். மேலும் குடியிருப்பு அனுமதிகளை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை எளிதாக்க உள்துறை மந்திரி அனிஸ் அல் சாலே பிறப்பித்திருந்த உத்தரவுகளை மேற்கோள்காட்டி கூறிய ரஷீத் அல் தவாலா, வெளிநாட்டினர்களில் காலாவதியான ரெசிடன்சி விசா மற்றும் பாஸ்ப்போர்ட்களை கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் எகிப்தியர்கள் மற்றும் இந்தியர்கள் எனவும் கூறியுள்ளார்.
குவைத்தில் காலாவதியான பாஸ்ப்போர்ட் மற்றும் ரெசிடன்சி விசாக்களை கொண்டிருக்கும் வெளிநாட்டவர்கள் அவற்றை புதுப்பித்துக்கொள்ள உயர் அமைச்சகத் தலைமையின் அறிவுறுத்தல்களின்படி, அந்தந்த நாட்டினை சேர்ந்த தூதரகங்களில் காலாவதியான பாஸ்போர்ட்டுகளை நீட்டிக்க அனுமதிப்பதன் மூலமும், அவர்களின் ரெசிடன்சி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க வெளியுறவு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தைப் பெறுவதன் மூலமும் புதுப்பித்துக்கொள்ள முடியும் என ரஷீத் அல் தவாலா கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில் சுமார் 7,000 வெளிநாட்டவர்கள் தங்களின் ரெசிடன்சி அனுமதியை ரத்து செய்துவிட்டு, கொரோனா வைரஸ் நெருக்கடிகளின் போது நாட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் எகிப்திய மற்றும் இந்திய நாட்டை சேர்ந்த பேச்சுலர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷீத் அல் தவாலா மேலும் தெரிவிக்கையில், “வெளிநாட்டினரின் ரெசிடன்சி அனுமதி மற்றும் வணிக, சுற்றுலா மற்றும் குடும்ப வருகைகளுக்கான விசாக்களின் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்திற்கு குவைத் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகைய விசாக்களுக்கு விதிக்கப்படும் கட்டணங்களின் அடிப்படையில் உலகின் மலிவான நாடக குவைத் கருதப்படுகிறது. புதிய விசாக்களுக்கான கட்டணம் தோராயமாக மற்ற வளைகுடா நாடுகளை போன்றே இருக்கும். புதிய கட்டணம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும்” என்றும் தெரிவித்துள்ளார்.
குவைத் நாட்டின் 4.8 மில்லியன் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3.4 மில்லியன் பேர் வெளிநாட்டினை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டினர்களின் எண்ணிக்கையை 30 சதவீத அளவில் குறைப்பது தொடர்பாக புதிய சட்டம் இயற்றப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகள் குவைத் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.