ஷார்ஜா : அல் நஹ்தா பகுதியில் இலவச கொரோனா பரிசோதனை..!! நாளை முதல் தொடக்கம் என அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் இருக்கும் அல் நஹ்தா பகுதியில் வசிப்பவர்களுக்கு நாளை (ஜூலை 5) முதல் கொரோனாவிற்கான இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தற்பொழுது ஷார்ஜா அரசு அறிவித்துள்ளது. ஷார்ஜா காவல்துறை, சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஆகியவை ஒருங்கிணைந்து நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு கொரோனாவிற்கான பரிசோதனையை அப்பகுதியில் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த செய்தியை அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு செல்போன் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாளை முதல் மேற்கொள்ளவிருக்கும் கொரோனா பரிசோதையானாது அல் நஹ்தா பூங்காவில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அமைக்கப்பட்டிருக்கும் மொபைல் ஸ்கிரீனிங் மையத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் தொடக்கத்தில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனாவிற்கான ஸ்க்ரீனிங் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரிசோதனைக்காக செல்பவர்கள் தங்களின் எமிரேட்ஸ் ஐடி மற்றும் அவர்கள் தங்கள் செல்போனிற்கு வந்திருக்கும் SMS செய்தியையும் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, அபுதாபியில் இருக்கும் முசாபா பகுதியில் 570,000 க்கும் மேற்பட்ட கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அபுதாபி சுகாதாரத் துறை வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், அபுதாபியில் பல்வேறு பகுதிகளிலும் கொரோனாவிற்கான பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வண்ணமே இருக்கின்றன.
உலகளவில் பெரியளவிலான கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஐக்கிய அரபு அமீரகமானது முதல் நான்கு இடங்களில் ஒரு நாடாக இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரையிலும், 3.625 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் அமீரகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.