இந்தியா : எமெர்ஜெண்சி லைட்டினுள் வைத்து கடத்தி சென்ற தங்கக்கட்டிகள் பறிமுதல்.. அமீரகம், சவுதியில் இருந்து கடத்தலில் ஈடுபட்ட 14 பேர் கைது..!!
சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருப்பி அனுப்பும் தனி விமானங்களில் இந்தியா சென்றடைந்த 14 பயணிகள் இந்தியாவில் 7.7 மில்லியன் திர்ஹம் (ரூ. 15 கோடியே 65 இலட்சம்) மதிப்புள்ள மற்றும் 31.9 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளை தங்கள் பொருட்களினுள் மறைத்து வைத்து கடத்தி சென்றுள்ளதாக தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கக்கட்டிகளை கடத்தி சென்ற பயணிகள் அனைவரும் ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கக்கட்டிகளை கடத்தி சென்றவர்கள் அதனை எமெர்ஜெண்சி லைட்டினுள் வைத்து மறைத்து எடுத்து சென்றுள்ளார்கள் என்று இந்தியாவின் சுங்கத்துறை சார்பாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் மூலம் ராஸ் அல் கைமாவிலிருந்து ஜெய்ப்பூரிற்கு சென்ற பயணிகளில் மூன்று பயணிகள் மேல் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் பரிசோதித்ததில் அவர்களை தங்கக்கட்டிகளை கடத்தி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இவர்கள் கடத்தி சென்ற 9.33 கிலோ எடையுள்ள 12 தங்கக்கட்டிகளானது ரூ.45,761,100 (2.25 மில்லியன் திர்ஹம்) மதிப்புள்ளதாகும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனை போன்றே, சவூதி அரேபியாவிலிருந்து திருப்பி அனுப்பும் விமானத்தில் ஜெய்ப்பூரிற்கு சென்ற மேலும் 11 இந்தியர்கள் ரூ.110,998,720 (5.45 மில்லியன் திர்ஹம்ஸ்) மதிப்புள்ள 22.65 கிலோ தங்கக் கட்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
Customs team recovers nearly 32 kg gold worth Rs. 15 Crore 67 lakh from passengers who arrived from UAE and Saudi Arabia at Jaipur International Airport today pic.twitter.com/1fgI4aAbxT
— PIB in Rajasthan (@PIBJaipur) July 4, 2020
தங்கக்கட்டிகளை கடத்தி சென்ற அனைவருக்கும் 1962 ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய சுங்கத்துறை 110 விதியின்படி, அவர்களிடமிருந்து தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் 104 விதியின்படி அவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து தங்கள் கட்டிகள் கடத்தி செல்வோரின் எண்ணிக்கையானது தற்பொழுது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.