குவைத் : சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடக்கம்.. குவைத் செல்லும் பயணிகளுக்கான வழிமுறைகள் வெளியீடு..!!
கொரோனாவின் பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளுக்கு தடை விதித்திருந்த குவைத் நாடானது, வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. மூன்று கட்டங்களாக மீண்டும் இயக்கப்பட இருக்கும் சர்வதேச விமான போக்குவரத்து சேவைகளானது முதலில் 30 சதவீத அளவிலான எண்ணிக்கையுடன் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளை மீண்டும் தொடங்க இருக்கும் குவைத் அரசாங்கமானது, குவைத்திற்குள் வர இருக்கும் பயணிகளுக்காக பயண வழிகாட்டுதல்கள் கொண்ட அறிக்கையை தற்பொழுது வெளியிட்டுள்ளது.
குவைத் அமைச்சரவையின் உச்சக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் ஒரு பகுதியாக, குவைத்திற்கு செல்லவிருக்கும் பயணிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் சுகாதார, கல்வி மற்றும் நீதிமன்றங்கள் போன்ற முக்கியமான அரசுத் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் எளிதில் திரும்புவதற்கான வழிவகை செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்திற்கு வரும் அனைத்து பயணிகளும் தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன்பு தாங்கள் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யும் PCR கொரோனா வைரஸ் சோதனை சான்றிதழ்களைப் பெற வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் நாட்டில் அங்கீகாரம் பெற்ற சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட COVID-19 நெகடிவ் சான்றிதழ் மற்றும் அவர்களின் வேலை ஒப்பந்தத்தின் நகலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் குவைத் நாட்டிற்கு திரும்பி வரும் போது, அவர்கள் கொரோனா வைரஸ் மற்றும் பிற தொற்று நோய்களிலிருந்து விடுபட்டுள்ளனர் என்பதை நிரூபிக்கும் சான்றிதழ்களுடன் குறிப்பிட்ட சுகாதார காப்பீட்டுக் கொள்கைகளையும் (health insurance policies) கொண்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.