குவைத் : ஜூலை 28 முதல் தொடங்கவிருக்கும் மூன்றாம் கட்ட தளர்வுகள்..!! ஊரடங்கு நேரம் குறைப்பு..!!
குவைத் நாட்டில் கொரோனாவால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பல்வேறு கட்டங்களாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், தற்போது நடைமுறையில் இருக்கும் இரண்டாம் கட்ட தளர்வு முடியவிருக்கும் நிலையில், வரும் ஜூலை மாதம் 28 ம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வுகள் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குவைத் நாட்டில் லாக்டவுன் விதிக்கப்பட்டிருந்த ஒரே பகுதியான பர்வானியா பகுதியிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் லாக்டவுன் தளர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் கட்ட தளர்வில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு நேரங்களைக் குறைத்தல், டாக்ஸி சேவைகளை மீண்டும் தொடங்குதல் (ஒரு வாகனத்திற்கு ஒரு பயணி மட்டுமே அனுமதி) மற்றும் ஹோட்டல், ரிசார்ட்ஸை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. கூடுதலாக, அனைத்து மசூதிகளிலும் இந்த வார இறுதியில் வரவிருக்கும் ஈத் அல் அத்ஹாவிற்கான சிறப்பு தொழுகை நடத்தப்படும் என்றும் அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட தளர்வில், ஊரடங்கானது இரவு 9 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்பதும், 50 சதவீத ஊழியர்கள் அரசு அலுவலகங்களுக்கு மீண்டும் திரும்பலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. குவைத் நாட்டின் சுகாதார அமைச்சர் பசில் அல் சபா அவர்கள் வெள்ளிக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தற்பொழுது அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை மூன்றாம் கட்டத்தில் முற்றிலுமாக நீக்குவதாக எடுக்கப்பட்டிருந்த முடிவு, பொது சுகாதார நலனை முன்னிட்டு தற்போது ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மூன்றாம் கட்ட தளர்வுகளில் ஒரு பகுதியாக வரும் ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், குவைத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் பயணிகளுக்கான மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.