வளைகுடா செய்திகள்

வளைகுடா நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு தனி விமானங்கள் இயக்கும் ‘காயிதே மில்லத் பேரவை’..!! ஏற்பாடுகள் தீவிரம்..!!

உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தில் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களின் மூலம் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டுவரும் அதே வேளையில், தற்போது தனியார் அமைப்பினர், தனியார் இயக்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாகவும் சார்ட்டர் விமானங்கள் எனப்படும் தனி விமானங்களும் அதிகளவில் இந்தியாவிற்கு இயக்கப்பட்டு வருகின்றன.

வந்தே பாரத்தின் கடந்த மூன்றாம் கட்ட நடவடிக்கையில் தனி விமானங்கள் இயக்க இந்திய அரசு அனுமதித்ததை தொடர்ந்து, இந்தியர்கள் அதிகம் வசிக்கும் வளைகுடா நாடுகளிலிருந்தும் எண்ணற்ற தனி விமானங்கள் இந்தியாவிற்கு தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றது. அதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான விமானங்கள் கேரள மாநிலத்திற்கே அம்மாநிலத்தை சார்ந்த KMCC உள்ளிட்ட தனியார் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் இயக்கப்பட்டும் வருகின்றது.

வந்தே பாரத் திட்டத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு மிக குறைவான எண்ணிக்கையிலேயே விமானங்கள் ஒதுக்கப்பட்டு வருவதால், இந்தியா செல்ல தூதரகத்தில் விண்ணப்பித்திருந்த பலரும் தாயகம் திரும்ப முடியாமல் இன்று வரையிலும் நாடு திரும்புவதற்கான நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டு உடனடியாக இந்தியா செல்ல முடியாமல் தவிப்பவர்களுக்கு தேவையான உதவிகளை வளைகுடா நாடுகளில் இயங்கி வரும் “காயிதே மில்லத் பேரவை” அமைப்பினர் முழுவீச்சில் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கலீஜ் தமிழிடம் சவூதி அரேபியாவிலிருந்து தனி விமானங்களை ஏற்பாடு செய்யும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டிருக்கும் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்கள், வேலை இழந்தவர்கள், மருத்துவ தேவை உள்ளவர்கள் போன்றோரின் அவசர தேவையை கருத்தில் கொண்டு, அவர்களை உடனடியாக தனி விமானங்களில் இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை காயிதே மில்லத் பேரவை (QMF) மற்றும் ராம்நாட் டெவெலப்மென்ட் குரூப் (RDG) இணைந்து மேற்கொண்டு வருவதாக கூறினார்.

மேலும் கூறுகையில், இந்த நடவடிக்கையானது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் K.M காதர் மொஹைதீன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான K.A.M.முஹம்மது அபுபக்கர் அவர்கள் ஆலோசனையின்படி தொடங்கப்பட்டதாகவும், இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினரும், ST கார்கோ நிறுவனருமான டாக்டர் K.நவாஸ்கனி MP அவர்களின் பேருதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

“அமீரகத்தை தொடர்ந்து தற்போது சவூதி அரேபியாவிலிருந்து தமிழகத்திற்கு தனி விமானம் இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக ரியாத்திலிருந்து திருச்சிக்கு ஒரு விமானமும், ஜித்தாவிலிருந்து திருச்சிக்கு ஒரு விமானமும் இயக்க அனுமதி கோரப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளோம். இந்த தனி விமானங்கள் வரும் ஜூலை 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சவூதியிலிருந்து புறப்படுவதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன” என்றும் அவர் கலீஜ் தமிழிடம் தெரிவித்தார்.

இந்த தனி விமானங்களில் பயணிக்க விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்வதற்காக IUML-QMF என்ற பெயரில் வலைதள லிங்க் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பிப்பவர்கள் அந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். எனினும், விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அவசர தேவையை கருத்தில்கொண்டே, தனி விமானத்தில் பயணிக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் கூறியதும் கவனிக்கத்தக்கது. தனி விமானத்திற்கான பயண கட்டணம் குறித்து நாம் கேட்டபோது, தனி விமான பயணம் உறுதி செய்யப்பட்டவுடன் அது குறித்த விபரங்கள் பயணிகளுக்கு முறையாக தெரிவிக்கப்படும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், சவூதி அரேபியாவில் இயங்கிவரும் ‘ஜித்தா தமிழ் சங்கம் (JTS)’ சார்பாகவும் தமிழகத்திற்கு தனி விமானம் இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன்படி ரியாத், ஜித்தா மற்றும் தமாம் ஆகிய பகுதிகளிலிருந்து திருச்சிக்கு தனி விமானம் இயக்க இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தமிழக அரசிடமிருந்து அனுமதியை பெறுவதற்குண்டான நடவடிக்கைகளை இராமநாதபுரம் MP டாக்டர் K.நவாஸ் கனி அவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். மேலும் இதற்கான ஏற்பாடுகளை ஜித்தா தமிழ் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிராஜ் அவர்கள் கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

இதற்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஜூன் 19 ஆம் தேதி ராஸ் அல் கைமா விமான நிலையத்திலிருந்து மதுரைக்கு ஒரு தனி விமானமும், அதனை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த KMCC அமைப்பின் உதவியுடன் ஜூன் 28 ஆம் தேதி திருவனந்தபுரம் வழியாக தமிழகத்திற்கு மற்றுமொரு தனி விமானமும் காயிதே மில்லத் பேரவையின் சார்பாக இயக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தவர்களை இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் டாக்டர் K.நவாஸ்கனி MP அவர்கள் நேரில் வரவேற்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ததும், பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் வசதி, மூன்று வேளை உணவு, கொரோனா பரிசோதனை, சொந்த மாவட்டங்களுக்கு செல்வதற்கான வாகன வசதி என அனைத்தும் காயிதே மில்லத் பேரவையின் சார்பாக இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியாவை தொடர்ந்து மற்ற வளைகுடா நாடுகளிலிருந்தும் தமிழகத்திற்கு தனி விமானங்களை இயக்குவதற்கான சாத்தியக் கூறுகளை காயிதே மில்லத் பேரவை அமைப்பின் மூலமாக ஆராய்ந்து வருவதாகவும், இது குறித்து டாக்டர் K. நவாஸ் கனி MP அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இந்திய அரசிடமிருந்து அதற்கான அனுமதி கிடைக்கும் பட்சத்தில், கூடிய விரைவில் அது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

தனி விமான பயணம் தொடர்பான மேலதிக விபரங்கள் பெற விரும்புபவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் தொடர்பு கொள்ளலாம் எனவும் அமைப்பினர் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!