வெளிநாடுகளில் காலாவதியான விசாக்களை வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் ஓமான் திரும்ப கட்டாயம் புதுப்பிக்க வேண்டும்..!!
விமான போக்குவரத்துக்கு தடையின் காரணமாக ஓமான் நாட்டிற்கு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தற்போது சிக்கியுள்ள ஓமான் குடியிருப்பாளர்களில் ரெசிடன்சி விசா காலாவதியானவர்கள் ஓமான் திரும்புவதற்கு தங்களின் விசாக்களை ஆன்லைன் மூலம் கட்டாயம் புதுப்பித்திருக்க வேண்டும் எனவும், விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் அவர்கள் ஓமானிற்கு திரும்பி வரலாம் என்றும் ராயல் ஓமான் காவல்துறையின் (ROP) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி மேலும் தெளிவாக கூறும்போது, காலாவதியான குடியிருப்பாளர்கள் விசாக்களை புதுப்பித்தல் அவர்களின் ஸ்பான்சரால் செய்யப்பட வேண்டும் என்றும், பின்னர் விசா புதுப்பிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் ரசீதை ஸ்பான்சர் குடியிருப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஓமான் நாட்டின் தேசிய வானொலியில் பேசிய பாஸ்போர்ட் மற்றும் வதிவிட இயக்குநரகம் உதவி இயக்குநர் மேஜர் முகமது பின் ரஷீத் அல் ஹப்சி கூறுகையில், “கொரோனா தொற்றுநோய் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக ராயல் ஓமான் காவல்துறை வழங்கிய பல வசதிகளில் ஆன்லைனில் காலாவதியான விசாக்களை புதுப்பித்தலும் ஒன்று” என்று கூறியுள்ளார்.
“மார்ச் 19 முதல் நேரடியாக வழங்க கூடிய சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் காலாவதியான அனைத்து விசிட் விசாக்களையும் தானாகவே நீட்டிப்பது உட்பட பல வசதிகளை, ஜூலை 1 ஆம் தேதி மீண்டும் மையங்கள் திறக்கும் வரை ROP,வழங்க முயன்றுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
“ஓமானில் இருக்கும் மக்கள் கலவாதியாகியிருக்கக்கூடிய தங்கள் விசாக்களை புதுப்பித்துக்கொள்ளவும் மற்றும் ஓமான் நாட்டிற்கு வெளியே 180 நாட்களுக்கும் மேல் குடியிருப்பாளர்கள் தங்கிக்கொள்ளவும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றும் அல் ஹப்சி தெரிவித்துள்ளார்.
“விசாக்களை புதுப்பித்துக்கொள்ள விரும்பும் ஸ்பான்சர்கள் பொது இயக்குநகரத்தை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ROP சேவை அலுவலகங்களுக்கு நேரடியாக வரும் மக்களின் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு இந்த வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.