அமீரக செய்திகள்

துபாய் முழுவதும் 23,600 இலவச வைஃபை ஸ்பாட்கள் இருப்பதாக அதிகாரிகள் தகவல்… டிஜிட்டல் துறையில் தொடர்ந்து முன்னேறி வரும் துபாய்..!!

உலகளவில் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் துபாயில் தற்போது 23,600 இலவச வைஃபை ஸ்பாட்கள் (wifi spots) உள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பெரும்பாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பூங்காக்கள், கடற்கரைகள், மால்கள் மற்றும் பிற பொது இடங்களில் இந்த இலவச வைஃபை வசதி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயை டிஜிட்டல் உலகின் உலகளாவிய தலைநகராக மாறுவதற்கான புதிய உத்தியை துபாய் டிஜிட்டல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் கீழ் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன்னதாக 2000 ஆம் ஆண்டில் துபாய் எமிரேட்டில் இ-கவர்ன்மென்ட் (e-government) முன்முயற்சியைத் தொடங்கியதில் இருந்து, ​​டிஜிட்டல் தொடர்பான பயணத்தில் துபாய் பல்வேறு திட்டங்களை வகுத்து தொடர்ந்து முன்னேறியிருக்கிறது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த 2013 ஆம் ஆண்டில் ஸ்மார்ட் அரசு (Smart Government) திட்டம் மற்றும் 2021 இன் இறுதிக்குள் விரிவான டிஜிட்டல் திட்டத்தின் ஒரு பகுதியாக ‘காகிதமில்லா அரசு (paperless government)’ முன்முயற்சியின் கீழ் அரசு அலுவலகங்களில் காகிதப் பயன்பாடுகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு துபாய் தொடர்ந்து டிஜிட்டல்மயமாக்கலை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று வரை டிஜிட்டல் ஊடுருவல் துபாயில் எந்த அளவிற்கு வந்துள்ளது என்பது பற்றிய புள்ளிவிவரங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதன்படி

  • அரசு சேவைகள் 99.5 சதவீத டிஜிட்டல் மயமாக்கலை எட்டியுள்ளன
  • காகிதமில்லா அரசின் நோக்கம் 100 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.
  • மொத்த அரசு சேவை பரிவர்த்தனைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தற்போது 87 சதவீதமாக உள்ளது.
  • 120க்கும் மேற்பட்ட அரசு ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன
  • அரசாங்க நிறுவனங்கள் இணைய பாதுகாப்பு குறிகாட்டிகளுடன் 80 சதவீதத்திற்கும் அதிகமான இணக்க விகிதத்தையும் துபாய் தரவு சட்டத்துடன் 100 சதவீத இணக்கத்தையும் பதிவு செய்துள்ளன.

குடியிருப்பாளர்களின் டிஜிட்டல் பயன்பாடு:

“Dubai Now” ஆப் மூலம், துபாயில் பார்க்கிங்கிற்கு பணம் செலுத்துதல், விசாவிற்கு விண்ணப்பித்தல், போலீஸ் அறிக்கையைத் தாக்கல் செய்தல், கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்தல் மற்றும் போக்குவரத்து விபத்தைப் புகாரளித்தல் போன்ற 170க்கும் மேற்பட்ட பொது மற்றும் வணிகத் துறை சேவைகளை 35க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து குடியிருப்பாளர்கள் அணுகலாம்.

நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மட்டும் இந்த ஆப் வழியாக சுமார் 2.6 மில்லியன் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளனர். 2022 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 2.1 மில்லியன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டது, இது ஆண்டுக்கு ஆண்டு 24 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது.

விரிவான சாலை வரைபடம் (roadmap):

துபாய் டிஜிட்டல் அத்தாரிட்டி, துபாய் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், டிஜிட்டல் முறையில் இயங்கும் சமூகத்தை உருவாக்குவதற்கும் ஸ்மார்ட் சொல்யூஷன்களைப் பயன்படுத்த முயற்சிக்கிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!