VBM 5 : அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு 123 விமானங்கள் இயக்கப்படும் என அறிவிப்பு..!!
வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்ட திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் மூலம் வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ம் தேதி வரையிலும் அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு 123 விமானங்கள் செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 118 விமானங்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானங்கள் என்றும் 5 விமானங்கள் ஏர் இந்தியாவை சேர்ந்த விமானங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கான சிறப்பு ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் முறையான அறிவிப்பு மற்றும் ஆன்லைன் முன்பதிவு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு விமானங்கள் இயக்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு வரும் விமானங்களின் டிக்கெட் புக்கிங் குறித்து அறிவிக்கப்படும் என்றும் துணை தூதரக அதிகாரி நீரஜ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
அதே போல், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசானது ஜூலை 12 ம் தேதி முதல் 26 ம் தேதி வரையிலான நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பு திருப்பி அனுப்பும் விமானங்களை இயக்க ஒப்புக் கொண்டதாக அறிவித்து அதன்படி இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் அவர் கூறும் போது, “ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒப்புதல்களைப் பெற்ற பயணிகளைத் திரும்ப அமீரகத்திற்கு அழைத்து வருவதற்கான விமான சேவைகள் தற்போதைக்கு தொடரும் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். ஐக்கிய அரபு அமீரக மற்றும் இந்திய அரசுக்கு சொந்தமான மற்றும் தனியார் விமான நிறுவனங்களிடம் ஏராளமான விமானங்கள் இருப்பதால் அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல விரும்பும் மற்றும் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு திரும்ப விரும்பும் பயணிகள் கவலைப்படத் தேவையில்லை” என்று அவர் உறுதியளித்துள்ளார். இருப்பினும், இந்திய அரசின் சார்பாகவோ அல்லது அமீரக அரசின் சார்பாகவோ இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே ஜூலை 12 முதல் 26 வரை சிறப்பு விமானங்களை இயக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதன் படி, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் திருப்பி அனுப்பும் விமானங்கள் இந்தியாவில் இருந்து புறப்படும் போது, இந்தியாவில் சிக்கி தவிக்கும் அமீரக குடியிருப்பாளர்களை அழைத்து வரும் என்று கூறப்பட்டது.
அதே போல், அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் அமீரகத்திற்கு சொந்தமான விமானங்களும் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு திரும்பி வரும் போது அமீரக குடியிருப்பாளர்களை அழைத்து வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, கடந்த 15 நாட்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிக்கி தவித்த அமீரக குடியிருப்பாளர்கள் மீண்டும் அமீரகத்திற்கு திரும்பி வந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு திரும்பும் அனைத்து பயணிகளும் ICA அல்லது GDRFA ஒப்புதல்கள் மற்றும் கொரோனாவிற்கான நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி முதல் ICA வினால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் இருந்து மட்டுமே கொரோனாவிற்கான மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமீரகத்தை சேர்ந்த விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள ICA அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களின் பட்டியலை கீழே உள்ள இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
covid-19 screening center details
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து செல்லும் இந்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை மேற்கொள்ளப்படவிருப்பதாக விமானப்போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று அறிவித்திருந்தார்.
ஹர்தீப் சிங் மேலும் கூறுகையில், “வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்ட நடவடிக்கை ஆகஸ்ட் 1 முதல் 31 வரை மேற்கொள்ளப்படவிருப்பதை நான் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை 814,000 இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 270,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இந்தியாவின் தனியார் விமானங்கள் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர். ஐந்தாம் கட்டத்திற்கான விமானங்களின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
source : Khaleej Times