VBM : ஆகஸ்ட் 1 முதல் தொடங்க இருக்கும் ஐந்தாம் கட்ட திருப்பி அனுப்பும் நடவடிக்கை..!! விமானப்போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு..!!
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து செல்லும் இந்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக விமானப்போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.
பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் தற்பொழுது வந்தே பாரத்திட்டத்தில் நான்காம் கட்டமாக வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீப காலத்தில் இந்தியா அரசானது ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற குறிப்பிட்ட நாடுகளுக்கு இடையே சிறப்பு விமான சேவைகளை இயக்க அனுமதி அளித்து விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஜூலை மாதம் முடிவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் இத்திட்டத்தின் ஐந்தாம் கட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக ஹர்தீப் சிங் பூரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதே போல், இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனமான ஏர் இந்தியாவும் ஐந்தாம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கும் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உறுதிப்படுத்தியுள்ளது.
ஹர்தீப் சிங் மேலும் கூறுகையில், “வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்ட நடவடிக்கை ஆகஸ்ட் 1 முதல் 31 வரை மேற்கொள்ளப்படவிருப்பதை நான் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை 814,000 இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 270,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இந்தியாவின் தனியார் விமானங்கள் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர். ஐந்தாம் கட்டத்திற்கான விமானங்களின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்ட அறிவிப்பில், ஐந்தாம் கட்டத்தில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு அதிகளவு விமான சேவைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைக்கு ஜூலை 31 ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் விமானப்போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இந்தியர்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர். தற்பொழுது இந்த அறிவிப்பானது ஆகஸ்ட் மாதத்திலும் இந்தியாவில் சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படாதோ என்ற கேள்வியை பலருக்கும் எழுப்பியுள்ளது.
Evacuation & outbound travel of every stranded Indian is a priority. No one will be left behind.
More than 814K people have returned since 6 May through various means.More than 270K have returned on VBM flights operated by @airindiain, @FlyWithIX & pvt Indian carriers.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) July 25, 2020