சட்டவிரோதமாக 60 தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவனத்திற்கு 3 மில்லியன் திர்ஹம்ஸ் அபராதம்..!! அபுதாபி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு நிறுவனம் 60 தொழிலாளர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து அந்த நிறுவனத்திற்கு 3 மில்லியன் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தால் விசா வழங்கப்பட்ட 60 தொழிலாளர்களும் அந்நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் பணிபுரியவில்லை என்று தெரியவந்ததை தொடர்ந்து நீதிமன்றத்தால் இந்த அபராதம் வழங்கப்பட்டுள்ளது.
அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் இருக்கும் ஒரு நிறுவனம் தொழிலாளர் மற்றும் குடிவரவு சட்டங்களை மீறியது கண்டறியப்பட்டு அந்நிறுவனம் மீது தொடரப்பட்ட வழக்கில், அபுதாபி முதல் நீதிமன்றம் (Abu Dhabi Court of First Instance) மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் (The appellate court) அந்த நிறுவனம் குற்றம் புரிந்துள்ளதாக தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றங்களின் இந்த தீர்ப்பை எதிர்த்து அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் அமீரகத்தின் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த அபுதாபி உயர் நீதிமன்றம் முந்தைய நீதிமன்றங்களின் தீர்ப்புகளை உறுதி செய்ததுடன், ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலா 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
அமீரகத்தின் ரெசிடன்சி விசா சட்டங்களை மீறியதாக வழக்கறிஞர்கள் அந்த நிறுவனம் மீது குற்றம் சாட்டியதோடு அதற்கு தண்டைனயாக அதிகபட்ச அபராதம் விதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தீர்ப்பளித்த நீதிமன்றமும் அந்த நிறுவனத்திற்கு தலா 50,000 வீதம் 3 மில்லியன் திர்ஹம்ஸ் அபராதத்தை விதித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் சட்டத்தின் கீழ், ஒரு ஊழியர் தனது முதலாளியிடம் மட்டுமே பணிபுரிய வேண்டும். ஒரு நிறுவனத்தில் விசா பெற்றுக்கொண்டு மற்றொரு நிறுவனத்தில் வேலை செய்ய முடியாது. மேலும் நிறுவனங்கள் விசிட் விசாக்களில் இருக்கும் நபர்களையோ அல்லது காலாவதியான விசாக்களுடன் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களையோ தங்களின் நிறுவனத்தில் பணிபுரிய நியமிக்கக்கூடாது.
சட்டவிரோதமாக இதுபோன்று தொழிலாளர்களை நியமிக்கும் எந்தவொரு முதலாளியும் அல்லது நிறுவனமும், முதல் குற்றத்திற்காக ஒரு தொழிலாளிக்கு 50,000 திர்ஹம்ஸ் அபராதமும், மீண்டும் அதே தவறை தொடர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டால் ஒரு தொழிலாளிக்கு 100,000 திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.