அமீரக செய்திகள்

விசிட் விசா காலாவதியானவர்கள் ஆகஸ்ட் 10 க்கு முன்னர் அமீரகத்தை விட்டு வெளியேற இந்திய துணை தூதரகம் வலியுறுத்தல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் வந்தே பாரத் திட்டத்தில் பதிவு செய்திருந்த சுமார் 500,000 இந்தியர்களில், இதுவரையிலும் 275,000 க்கும் அதிகமானோர் இந்தியா சென்றடைந்துள்ளதாக துபாயில் இருக்கும் இந்திய துணைத் தூதரகம் நேற்று (ஆகஸ்ட் 2) ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் திருப்பி அனுப்பும் நடவடிக்கை குறித்து இந்தியர்களுக்கு வெளியிட்டுள்ள ஆலோசனையில் துணை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

ஒரு சில பகுதிகளை தவிர, இந்தியாவின் பெரும்பாலான இடங்களுக்கு திருப்பி அனுப்ப பெறப்பட்ட கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், திருப்பி அனுப்பும் விமானங்கள் தொடர்பான ஆலோசனையில் தூதரகம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அமீரகத்தில் சிக்கி தவிப்பவர்களில் இந்தியாவிற்கு செல்ல விரும்பும் இன்னும் சிலர் இருக்கக்கூடும் என்று நாங்கள் எண்ணுகிறோம். ஆனால் இந்தியா செல்வதற்கான விமான பயண டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான தெளிவு மற்றும் போதிய வழிமுறைகள் இல்லாததால் அவர்களால் டிக்கெட்டை பெறமுடியவில்லை” என கூறியுள்ளது.

மேலும் துபாய் மற்றும் ஷார்ஜாவிலிருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு வந்தே பாரத்தின் ஐந்தாம் கட்டத்தில் இயக்கப்படும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் ஏராளமான இருக்கைகள் இன்னும் காலியாக இருப்பதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் சென்னை, திருச்சி, கேரளா, டெல்லி, கயா, வாரணாசி, அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், பெங்களூரு, மங்களூரு மற்றும் லக்னோ ஆகிய பகுதிகளுக்கு ஆகஸ்ட் 15 வரை இயக்க திட்டமிடப்பட்டிருக்கும் 90 விமானங்களில் பயணிக்க இந்தியர்கள் தங்களின் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

இது தவிர, எமிரேட்ஸ், ஃப்ளைதுபாய், ஏர் அரேபியா, ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ, கோ ஏர் மற்றும் விஸ்டாரா ஆகிய விமானங்களும் துபாய், ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமாவிலிருந்து இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கு கிட்டத்தட்ட 100 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

மார்ச் 1 க்குப் பிறகு காலாவதியான ஐக்கிய அரபு அமீரக விசிட் விசா வைத்திருப்பவர்கள் ஓவர்ஸ்டே அபராதங்களைத் தவிர்ப்பதற்காக அமீரகம் அறிவித்துள்ள ஆகஸ்ட் 10 வரையிலான காலக்கெடுவிற்கு முன்னரே அமீரகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தூதரகம் இந்தியா நாட்டவர்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்தியா செல்வதற்கான விமான பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாதவர்கள் www.cgidubai.gov.in/helpline.php எனும் இணையதள முகவரிக்கு தங்களின் பாஸ்போர்ட் எண், ஈமெயில், மொபைல் எண், மற்றும் இந்தியாவில் செல்ல விரும்பும் விமான நிலையம் உள்ளிட்ட தகவல்களை அனுப்புவதன் மூலம், குறிப்பிட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு பயண டிக்கெட்டை பெற்று தருவதற்கு தூதரகம் உதவும் எனவும் அந்த ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!