தமிழகம் செல்லும் வெளிநாடுவாழ் இந்தியர்களின் கவனத்திற்கு.. சென்னை மாநகராட்சி வெளியிட்ட புதிய தனிமைப்படுத்தல் விதிகள்..!!

வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை தாயகத்திற்கு திருப்பி அழைத்து வரும் நடவடிக்கையாக, இந்தியாவிற்கும் உலகின் பிற நாடுகளுக்கும் இடையே தற்போது வரையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், இந்தியா திரும்பும் சர்வதேச பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் தொடர்பான விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய அரசு விதித்திருந்தது. தற்போது பல நாடுகளிலும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்திய அரசாங்கமும் கொரோனா தனிமைப்படுத்தல் விதிகளில் பல கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.
கட்டுப்பாடுகளை நீக்குவதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஆகஸ்ட் 8 முதல் இந்தியா செல்லவிருக்கும் பயணிகளில் 7 நாட்கள் கட்டண தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெறுவதற்கு, 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையின் நெகடிவ் ரிசல்ட்டை AIR SUVIDHA என்ற இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்றும், இதனால் இந்தியா வரும் பயணிகள் கட்டண தனிமைப்படுத்தலில் விலக்கு பெற்று 14 நாட்களும் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகம் வரும் சர்வதேச பயணிகளுக்கு குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையம் வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டண தனிமைப்படுத்தல் தொடர்பான புதிய விதிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையின்படி, தமிழகம் வரும் பயணிகள் குறைந்தது 8 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள கட்டாய தனிமைப்படுத்தல் தொடர்பான புதிய விதிமுறைகள்…
- விமான நிலையம் வந்தடையும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனாவிற்கான ஸ்வாப் டெஸ்ட் (Swab Test) எடுக்கப்படும்.
- அனைத்து பயணிகளும் சென்னை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் குறைந்தது 8 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
- தனிமைப்படுத்தலுக்கான கட்டணம் (மூன்று வேளை உணவு உட்பட) ஹோட்டல் நிர்வாகத்தினரால் வசூலிக்கப்படும்.
- அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் கட்டண தனிமைப்படுத்தலுக்கு செல்பவர்கள், ஹோட்டலில் உள்நுழையும் போதே (Check-In) 8 நாட்களுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
- விமான நிலையம் வரும் பயணிகளில் கொரோனாவிற்கான முதலாவது பரிசோதனையில் கொரோன பாசிட்டிவ் என்ற முடிவை பெறுபவர்கள், கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
- விமான நிலையம் வரும் பயணிகளில் கொரோனாவிற்கான முதலாவது பரிசோதனையில் கொரோனா நெகடிவ் என்ற முடிவை பெறுபவர்கள், மீதமுள்ள நாட்களுக்கு ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
- ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இருக்கும் பயணிகளுக்கு 7 ஆவது நாளில் கொரோனாவிற்கான இரண்டாவது ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்படும்.
- இரண்டாவது பரிசோதனையில் நெகடிவ் ரிசல்ட் பெரும் பயணிகள் மட்டுமே ஹோட்டலில் இருந்து வெளியேற (Check-Out) அனுமதிக்கப்படுவர்.
- இரண்டாவது பரிசோதனையின் முடிவை பொறுத்து ஹோட்டல்களில் மேற்கொண்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுபவர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகளை சர்வதேச பயணிகள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், பின்பற்ற தவறுபவர்கள் தொற்றுநோய் பரவல் விதி-1987 (Epidemic Diseases Act – 1987) ன் படி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் சார்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.