வளைகுடா செய்திகள்

சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருக்கும் 75,000 பேரை கைது செய்ய குவைத் உள்துறை அமைச்சகம் முடிவு..!!

குவைத் நாட்டில் பொதுமன்னிப்பின் மூலம் நாட்டை விட்டு வெளியேறாமல் சட்டத்திற்கு புறம்பாக தற்பொழுது வரையிலும் தங்கியிருக்கும் குடியிருப்பாளர்களை கைது செய்வதற்கான திட்டம் ஒன்று குவைத் உள்துறை அமைச்சகத்தால் வகுக்கப்பட்டு தற்போது அது செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

குவைத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற பொதுமன்னிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு அதன் மூலம் அந்நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் எந்த அபராதமும் இன்றி அரசின் உதவியோடு குவைத்தை விட்டு வெளியேறலாம் என குவைத் அரசு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து தத்தமது நாடுகளுக்கு திரும்பி சென்றுள்ளனர். இருப்பினும், இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து குவைத் நாட்டில் தங்கி இருப்பது தற்போது அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது.

இது தொடர்பான புள்ளிவிவரங்கள் படி, கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த பொதுமன்னிப்பு திட்டத்தின் மூலம் 26,000 வெளிநாட்டவர்கள் தங்களின் நாடுகளுக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும், இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ளாமல் இதுவரையிலும் சுமார் 75,000 வெளிநாட்டினருக்கும் மேல் சட்டத்திற்கு புறம்பாக குவைத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

தற்போது சட்டத்திற்கு புறம்பாகவும், பொதுமன்னிப்பை பயன்படுத்திக்கொள்ளாமலும் இருக்கும் வெளிநாட்டவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற குவைத் அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்து நாடு கடத்துவதற்கான திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற நாடுகளுக்கிடையேயான சர்வதேச விமானப் போக்குவரத்து முற்றிலும் தொடங்கப்பட்டவுடன் இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கருத்தில்கொண்டும், வெளியேற்றும் மையங்களில் அதிககளவில் கூட்டம் கூடுவதை தடுக்கும் விதமாக சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருப்பவர்கள் கைது செய்யப்பட்டவுடன் உடனடியாக நாட்டை விற்று வெளியேற்றப்படுவார்கள் எனவும் அமைச்சகம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!