ஓமானில் நேற்று பெய்த கனமழையில் 13 பேர் பலி.. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்..!!

ஓமானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெய்த தீவிர மழையைத் தொடர்ந்து இன்றும் (திங்கள்கிழமை) கனமழை நீடித்து வருகின்ற நிலையில், ஓமானில் இருக்கக்கூடிய வடக்கு அல் ஷர்கியா மாகாணத்தில் காணாமல் போன ஒருவரை சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆணையம் (CDAA) சடலமாக மீட்டெடுத்துள்ளது. இதனால் ஓமானில் மோசமான வானிலையால் பலியானவர்களின் எண்ணிக்கை பதின்மூன்றாக உயர்ந்துள்ளது.
இது குறித்து CDAA அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “வடக்கு அல் ஷர்கியா கவர்னரேட்டில் உள்ள குடிமைத் தற்காப்பு மற்றும் ஆம்புலன்ஸ் துறையின் தேடல் குழுக்களின் முயற்சியின் ஒரு பகுதியாக, குடிமக்கள் மற்றும் பிறரது உதவியுடன் காணாமல் போனவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ஒரு குழந்தை உட்பட மேலும் 3 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் திடீரென கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அத்துடன் மழை வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, இந்த கடும் வெள்ளத்தில் பலியானவர்களில் 9 மாணவர்கள், 2 குடியிருப்பாளர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டவர் அடங்குவதாக அவசரகால மேலாண்மைக்கான தேசியக் குழு (National Committee for Emergency Management) தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் கடுமையான வெள்ளத்தில் மூழ்கியதாகவும், பேருந்துகளில் சிக்கிய பள்ளி மாணவர்களையும், வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்களையும், பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகன ஓட்டிகளையும் ராயல் ஓமன் காவல் துறை உடனடியாக மீட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராயல் ஓமன் காவல்துறை மட்டுமின்றி, ஓமான் ராயல் ஆர்மி, சிவில் பாதுகாப்பு ஆணையம் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றின் களக் குழுக்கள் பள்ளியில் இருந்து மாணவர்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளன. மேலும், காவல்துறையின் விமானக் குழுவும் பள்ளத்தாக்குகள் காரணமாக வீடுகளுக்குச் செல்ல முடியாமல் தவித்த 21 பேரை பண்ணை பகுதியிலிருந்து குரியாத் கவர்னரேட்டில் உள்ள அல் லாஸ்மோ பகுதிக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானில் நிலவி வரும் இந்த மோசமான வானிலையை கருத்தில்கொண்டு, ஓமானில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஏப்ரல் 15 திங்கட்கிழமை, தொலைதூர வகுப்புகளை நடத்துமாறு உயர்கல்வி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், வணிக உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வானிலை தொடர்பான அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தற்சமயம், தெற்கு அல் ஷர்கியா, வடக்கு அல் ஷர்கியா, அல் டாகிலியா மற்றும் அல் தாஹிரா மற்றும் அல் வுஸ்டாவின் சில பகுதிகளில் மாறுபட்ட தீவிரத்துடன் மழை பெய்து வருவதாகவும், இந்த மழையானது சுறுசுறுப்பான காற்று மற்றும் அவ்வப்போது ஆலங்கட்டி மழையுடன் இருக்கும் என்றும் ஓமானில் உள்ள வானிலைத் துறை கூறியுள்ளது.
இதற்கிடையில், ஓமானின் அவசரகால மேலாண்மைக்கான தேசியக் குழு, வானிலை நிலவரம் குறித்து, பல அபாய எச்சரிக்கைக்கான தேசிய மையம் வழங்கிய எச்சரிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. வானிலை முன்னறிவிப்பின் படி, நாட்டில் அதிகளவிலான மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதால், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பள்ளத்தாக்குகளைக் கடக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஓமானைப் போலவே, ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளும் ஆலங்கட்டி மழை, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய நிலையற்ற வானிலையால் பாதிக்கப்படும் என்றும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவிற்கு பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.