வளைகுடா செய்திகள்

ஓமானில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் சிக்கிய குடியிருப்பாளர்கள்.. மீட்பு பணிகள் தீவிரம்..!!

ஓமானில் இன்று காலை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14) முதல் பெய்து வரும் கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓமானில் ஏற்பட்டுள்ள இந்த சீரற்ற காலநிலை காரணமாக குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குடியிருப்பாளர்கள் பலரும் கார்களிலும் மற்றும் வீடுகளிலும் சிக்கியுள்ளதாக ராயல் ஓமன் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த கனமழையின் காரணமாக வாடி சமத் அல் ஷான் முன்னெப்போதும் இல்லாத வகையில் நீர்மட்ட உயர்வைக் கண்டதாகவும், இதனால் அல் கசல் பகுதியில் அமைந்துள்ள ராவ்தா பள்ளியில் வெள்ளம் புகுந்ததால் கட்டிடத்திற்குள் மக்கள் சிக்கிக் கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த பலத்த நீரோட்டத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றன.

இதற்கிடையில், இஸ்கி பகுதியில் உள்ள வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்ததையடுத்து, அப்பகுதியில் உள்ள வீட்டில் ஏழு பேர் சிக்கிய நிலையில், அவர்களை மீட்க ஓமான் காவல்துறையினர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, அல்-முதைபியின் விலாயத்தில் சமத் அல் ஷான் பகுதியில் அமைந்துள்ள வாடி அல் மமூராவின் நீரோடைகளுக்கு மத்தியில் குடியிருப்பாளர்கள் ஒரு வாகனத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளனர். தற்போது அவர்களை மீட்கவும் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு நிலைமையை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், வாடி அல் சுவைரிஜிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், இரண்டு பேர் வாகனத்திற்குள் சிக்கிக் கொண்டதாக காவல்துறைக்கு அழைப்பு வந்ததையடுத்து, நிலைமையை உடனுக்குடன் தீர்க்க அவசர உதவிக் குழுக்கள் தற்பொது நாடு முழுவதும் குவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, குரியாத்-மஸ்கட் சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அல்-மஸரா மருத்துவமனைக்கு எதிரே உள்ள சாலையில் கற்கள் மற்றும் தூசிகள் ஓடுவதைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அத்துடன், அதிகரித்து வரும் சீரற்ற வானிலை குறித்து குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும், பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளனர்.

ஓமானின் அவசரகால மேலாண்மைக்கான தேசியக் குழுவானது மோசமான வானிலை நிலையின் முன்னேற்றங்கள் குறித்து, நாட்டின் தேசிய வானிலை மையம் வழங்கிய பல அபாய எச்சரிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.

மேலும், ஓமானில் எதிர்பார்க்கப்படும் மழையின் அளவு அதிகமாக இருப்பதால், நிலைமையின் தாக்கங்களைத் தணிப்பதற்காக, ஆயத்த நிலை மற்றும் தயார்நிலையை உயர்த்துவதற்கு, தேசிய அவசரகாலச் சூழல் மேலாண்மை மற்றும் அனைத்துத் துறைகள், துணைக் குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், குடியிருப்பாளர்கள் தங்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றுவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், மோசமான வானிலை குறித்த புதுப்பித்தல்களுக்கு உத்தியோகபூர்வ தகவல்தொடர்புகளைப் பின்பற்றவும் குடியிருப்பாளர்களை ராயல் ஓமான் காவல்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!