அமீரக செய்திகள்

அமீரகத்தில் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் காய்ச்சல்.. தடுப்பூசி எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுரை..!

செப்டம்பரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, காய்ச்சல் மற்றும் உடல்வலி காரணமாக மருத்துவ மையங்களில் குழந்தைகளில் வருகையைப் பார்க்கும்போது, ​​தங்கள் குழந்தைகளுக்கு பருவகால காய்ச்சலுக்கு எதிராக இன்ஃபுளூயன்ஸா தடுப்பூசி போடுமாறு பெற்றோர்களை மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அதிகபட்ச எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் வருவதாகவும், காய்ச்சலுக்கான தடுப்பூசி பெறுவதன் முக்கியத்துவம் குறித்தும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரைம் மெடிக்கல் சென்டர் புர்ஜுமன் கிளையின் குழந்தை மற்றும் நியோனாட்டாலஜிஸ்ட் டாக்டர் அபின் விஜயன் கூறுகையில் “குழந்தைகள் தங்கள் நர்சரி அல்லது பள்ளிகளில் வைரஸால் பாதிக்கப்படும் பல நிகழ்வுகளை கிளினிக்குகளில் நான் காண்கிறேன். அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலியுடன் வீடு திரும்புகின்றனர். இதனால் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி எடுக்க நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன், அதனை அமீரக்த்தில் குளிர்காலம் தொடங்கும் முன் எடுத்துக் கொள்ளுங்கள்.  ஆறு மாத குழந்தைகள் முதல் 60 வயது வரை உள்ள அனைத்து வயதினரும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம். தடுப்பூசி பொதுவாக ஆரோக்கியமான வயது வந்தவர்களுக்கு 70 முதல் 90 சதவிகிதம் பாதுகாப்பையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை 25 முதல் 40 சதவிகிதம் குறைக்கிறது” என்றார்.

“ஐந்து முதல் ஒன்பது வயது வரையிலான குழந்தைகளில் காய்ச்சல் விகிதம் அதிகமாக உள்ளது, ஆனால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சிக்கல்கள் அதிகம். ஆறு மாதங்கள் முதல் 18 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும், குழந்தைகள், சுகாதாரப் பணியாளர்கள், காய்ச்சல் பருவத்தில் கர்ப்பமாக இருக்கும் அனைத்து பெண்களுக்கும் தடுப்பூசியை நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன்” என்று மேலும் அவர் கூறினார்.

இது குறித்து ஆஸ்டர் மருத்துவமனை டாக்டரான சந்தோஷ் ஜார்ஜ்,  “கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அமீரக்த்தில் குளிர்காலம் தொடங்க இருப்பதால் காய்ச்சல் மற்றும் பல்வேறு வகையான வைரஸ் காய்ச்சலுடன் அதிகம் பாதிக்கப்பட்டு குழந்தைகள் எங்கள் கிளினிக்குகளில்  வருகின்றனர். கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தவுடன் குழந்தைகளுக்கு காய்ச்சல் அல்லது வைரஸ் தொற்று ஏற்படுகிறது. காய்ச்சலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி தடுப்பூசியைப் பெறுவதுதான்” என்றார்.

“காய்ச்சல் அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கும். பொதுவாக, ஒரு குழந்தை அல்லது வயது வந்தவர் நோய்த்தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து ஒருமுறை பாதிக்கப்பட்டு குணமடைய சில நாட்கள் முதல் இரண்டு வாரங்கள் வரை ஆகும். தொற்றுநோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள காய்ச்சல் தடுப்பூசி சிறந்த வழியாகும். இது ஒரு பாதுகாப்பான தடுப்பூசி. குழந்தைகளுக்கு, வரவிருக்கும் மாதங்களில் இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் இது மிகவும் முக்கியமானது. எனவே,  சிகிச்சையை விட தடுப்பு எப்போதும் சிறந்தது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஃப்ளூ ஷாட் செலுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று மருத்துவர் சந்தோஷ் ஜார்ஜ் மேலும் கூறினார்.

அபுதாபியில் உள்ள மீடியோர் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் அய்மன் ஃபஹ்மி கூறுகையில், “ஆறு மாதங்களுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடலாம். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் பொதுவாக காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கு ஏற்ற மாதங்கள்.  அக்டோபர் இறுதிக்குள் தடுப்பூசி போட மக்கள் முயற்சிக்க வேண்டும். ஏனெனில் காய்ச்சல் பொதுவாக பிப்ரவரியில் உச்சம் அடைந்து மே வரை தொடர்கிறது” என்றார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!