அமீரக செய்திகள்

UAE: சுத்தமின்மை.. மாடிப்படிகளில் துணி காயப்போடுதல்.. பராமரிப்பில்லாத புகை கண்டறியும், தீ அணைக்கும் கருவிகள்.. உரிமையாளர்களை எச்சரித்த அதிகாரிகள்..!!

அபுதாபி சிவில் தற்காப்பு ஆணையமானது (Abu Dhabi Civil Defence Authority), அபுதாபி எமிரேட்டில் உள்ள மூலோபாய பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் திடீரென தொடங்கப்பட்ட கள ஆய்வுகளின் போது பல கட்டிடங்கள் மற்றும் நிறுவனங்களில் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் இருப்பதை கண்டறிந்துள்ளது.

இந்த விதிமீறல்கள் சமீபத்தில் இரண்டு வார கால இடைவெளியில், முன்னறிவிப்பு ஏதும் இல்லாத திடீர் ஆய்வுகளின் போது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கான விதிமுறைகளில், மீறல்களை கொண்ட கட்டிடங்கள் அனைத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யுமாறு கட்டிடங்கள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு ஆணையம் எச்சரித்துள்ளது.

மேலும், அபுதாபி எமிரேட்டில் உள்ள குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தீயணைப்பு அமைப்புகளைப் பராமரிக்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதை உறுதிசெய்ய உரிமையாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கள ஆய்வு முன்முயற்சியின் இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் இசா அப்துல்லா அல் மர்சூகி என்பவர் கூறுகையில், பாதுகாப்பு குறைபாடுள்ள நடைமுறைகளான மத்திய எரிவாயு சேமிப்பு தொட்டிகளைச் சுற்றியுள்ள தளத்தின் தூய்மையற்ற தன்மை, சிவில் பாதுகாப்பு ஆணையத்தின் முன் அனுமதியின்றி கட்டிடத்தில் சீரற்ற மாற்றம் செய்தல் மற்றும் சில கட்டிடங்களின் கூரைகளில் சீரற்ற அறைகள் மற்றும் சமையலறைகளை உருவாக்குதல் போன்ற விதிமீறல்களை ஆய்வுக் குழுக்கள் கண்டறிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், மின்சார ஜெனரேட்டர்கள், தண்ணீர் பம்புகள் மற்றும் பல கட்டிடங்களின் தாழ்வாரங்கள், Emergency Exit போன்ற தப்பிக்கும் பாதைகளில் தடையாக இருக்கும் பொருட்களை சேமித்து வைப்பது உள்ளிட்ட எண்ணற்ற முறைகேடுகளை கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுவதாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, பல கட்டிடங்கள் மற்றும் நிறுவனங்களில் தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் புகை கண்டறியும் கருவிகளுக்கான பராமரிப்பு ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை என்று கள ஆய்வுகள் முடிவு செய்ததாக அல் மர்சூகி கூறியுள்ளார்.

இதற்கிடையில், அபுதாபி சிவில் தற்காப்பு ஆணையத்திடம் முன் அனுமதியின்றி உரிமம் பெறாமல் பேக்கரிகள் மற்றும் உணவகங்களில் டீசல் டேங்குகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இது போன்ற முறைகேடுகளை சரிசெய்து விதிகளை முறையாக பின்பற்றுமாறு அதிகாரிகள் கட்டிட உரிமையாளர்களை வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!