அமீரக செய்திகள்

ரமலான் மாதத்தில் அமீரக குடியிருப்பாளர்கள் அனுபவிக்கப்போகும் மாற்றங்கள் என்னென்ன.? சிறு பார்வை…

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் துவங்க இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளன. பொதுவாகவே ஐக்கிய அரபு அமீரகமானது ரமலான் மாதத்தை முன்னிட்டு பல்வேறு மாற்றங்களை ஒவ்வொரு வருட ரமலான் மாதத்திலும் எதிர்கொள்ளும். அதுபோலவே இந்த வருடமும் அமீரகம் முழுவதும் வேலை மற்றும் பள்ளி நேரங்கள் குறைக்கப்படுவதுடன், வணிக நிறுவனங்களின் இயக்க நேரத்திலும், கட்டண பார்க்கிங் நேரங்களிலும் மாற்றங்கள் ஏற்படும்.

அதேபோன்று பகல் நேரத்தில் முஸ்லிம்கள் நோன்பு நோற்றிருப்பதால் பெரும்பாலான உணவகங்கள் தங்களின் செயல்படும் நேரத்தை மாற்றிக்கொள்ளும். அதன்படி உணவகங்கள் மாலை வேளையில் திறக்கப்பட்டு நள்ளிரவிற்கும் பின்பாகவே மூடப்படும். மேலும் ரமலான் மாதம் முழுவதும் ஷாப்பிங் மால்கள் வழக்கமாக மூடப்படும் நேரத்திற்கு பதிலாக நள்ளிரவு வரையிலும் திறந்திருக்கும்.

அதுபோல, ரமலான் மாதத்தின் போது இரவுநேர சந்தைகள் மற்றும் 90 சதவீதம் வரை தள்ளுபடி சலுகை அளிக்கக்கூடிய விற்பனை மற்றும் ப்ரோமோஷன்கள் போன்றவற்றையும் அமீரகத்தில் பரவலாக காணலாம். இது போன்று ரமலானை முன்னிட்டு அமீரகத்தில் காணப்படும் சில முக்கிய மாற்றங்கள் குறித்த விபரங்களை பார்க்கலாம்.

வேலை நேரம் குறைப்பு:

— ரமலான் மாதத்தில் முக்கியமான ஒரு மாற்றமாக எல்லோராலும் அறியப்படுவது வேலை நேரத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றமே. ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு நோற்றிருப்பதால் இந்த மாதம் முழுவதும் சம்பளக் குறைப்பு ஏதும் இல்லாமல் தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை நேரத்தில் இரண்டு மணி நேரம் குறைக்கப்படும்.

— அமீரகத்தின் அனைத்து எமிரேட்டுகளிலும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை என 6 மணி நேரம் மட்டுமே செயல்படும். அதுமட்டுமின்றி, முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இந்த வேலை நேரம் பொருந்தும்.

பள்ளி செயல்படும் நேரம் குறைப்பு:

— ரமலான் மாதத்தை முன்னிட்டு சில கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு பள்ளி நேரத்தை குறைத்து ரமலான் நேரங்களில் திங்கள் முதல் வியாழன் வரை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும். அதேவேளை வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் 11.30 மணி வரை மட்டுமே பெரும்பாலான பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறும்.

— அதேநேரம், நோன்பு இருக்கும் மாணவர்கள் உடற்கல்வி அல்லது PE பாடங்களின் போது அவற்றில் பங்கேற்க தேவையில்லை. மேலும் நீச்சல் பயிற்சி உள்ளிட்ட சோர்வடைய செய்யும் விளையாட்டுகள் பள்ளிகளில் ரத்து செய்யப்படும். அத்துடன் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களும் குறைக்கப்படும்.

வணிக இயக்க நேரத்தில் மாற்றம்:

— பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகை கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும் என்றாலும் ஒருசில வணிகங்கள் நோன்பு நேரத்தை கணக்கிட்டு, பகலில் கடைகளை மூடிவிட்டு மாலை நேரங்களில் மட்டுமே கடைகளை திறக்கும் வாய்ப்பும் உள்ளது. இருந்த போதிலும் ரமலான் நேரங்களில் மக்களுக்காக ஷாப்பிங் இடங்கள் வழக்கமாக மூடப்படும் நேரத்தை விடவும் நீண்ட நேரம் திறந்திருக்கும்.

— உணவகங்களை பொறுத்தவரை சில உணவகங்களை தவிர மற்ற பெரும்பாலான உணவகங்கள் காலை மற்றும் மதிய நேரங்களில் மூடப்பட்டிருக்கும். அதே போன்று ஒரு சில உணவகங்களில் அமர்ந்து உணவு உன்ன அனுமதி இருக்காது. இதனால் நோன்பு நோற்காதவர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் அதற்கேற்ப தங்களின் காலை மற்றும் மதிய உணவிற்கு திட்டமிட்டு பார்சல் வசதி இருந்தால் அதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

பார்க்கிங் நேரத்தில் மாற்றம்:

— ரமலான் மாதத்தின் போது அமீரகம் முழுவதும் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்தும் நேரங்களிலும் மாற்றம் இருக்கும். முந்தைய ஆண்டுகளில் ரமலான் காலத்தின் போது பின்பற்றப்பட்ட பார்க்கிங் நேரமே இந்த ஆண்டும் தொடரலாம். அதன்படி, முஸ்லிம்கள் நோன்பு திறக்கும் மாலை நேரங்களில் பார்க்கிங் இலவசமாகவும் பின்னர் 8 மணியிலிருந்து நள்ளிரவு வரை கட்டண பார்க்கிங் ஆகவும் இருக்கும்.

வாகன ஓட்டிகளுக்கான அறிவுரை:

— ரமலானின் போது நோன்பு நோற்பவர்கள் அதிகாலை நேரம் சீக்கிரம் எழுவது, மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது போன்றவற்றால் பெரும்பாலான முஸ்லிம்கள் போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பார்கள்.

— இது வாகனங்களை ஒட்டி செல்லும் நபர்களுக்கு மோசமான வாகன விபத்திற்கு வழிவகுக்கும். எனவே காவல்துறையினரின் அறிவுரையின்படி, அத்தைகைய நேரங்களில் வாகன ஓட்டிகள் தங்களின் வாகனத்தை ஓய்வெடுக்கும் இடங்களில் நிறுத்தி ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!