அமீரக செய்திகள்

அரசு ஊழியர்கள் 14 நாட்களுக்கு ஒரு முறை சொந்த செலவில் PCR சோதனை மேற்கொள்ள வேண்டும்..!! அமீரக அரசு அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அரசாங்க மனித வளங்களுக்கான பெடரல் ஆணையம் (Federal Authority for Governmental Human Resources) இன்று (செவ்வாய்க்கிழமை) கொரோனாவிற்கான புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விதிமுறையானது, அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 17 முதல் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து அரசு ஊழியர்களும் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒருமுறை PCR பரிசோதனையை ஊழியரின் சொந்த செலவில் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தற்பொழுது தெரிவித்துள்ளனர்.

மேலும்,அனைத்து மத்திய அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கும் விநியோகிக்கப்பட்ட சுற்றறிக்கையின் படி இந்த புதிய விதிமுறையில் இருந்து கொரோனா தடுப்பூசி பெற்ற ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், உடல்நலம் அல்லது நோய் நிலை காரணமாக கொரோனா தடுப்பூசியைப் பெற முடியாது என்பதைக் குறிக்கும் நாட்டின் அதிகாரப்பூர்வ சுகாதார அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட அறிக்கை (report) அல்லது மருத்துவ சான்றிதழைப் (medical certificate) பெற்ற ஊழியர்களுக்கு 14 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கப்படும் PCR சோதனையானது மத்திய அரசு நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடவடிக்கைகள் தொற்றுநோயை நிவர்த்தி செய்வதிலும், அதன் பரவல் மற்றும் விளைவுகளை கட்டுப்படுத்துவதிலும், பாதுகாப்பான பணிச்சூழலை மேம்படுத்துவதன் மூலம் ஊழியர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

மேலும், அனைத்து கூட்டாட்சி அமைச்சகங்களையும் தங்கள் ஊழியர்கள் மற்றும் அவுட்சோர்சிங் மற்றும் பொது சேவை நிறுவனங்களின் ஊழியர்கள், அத்துடன் ஆலோசனை சேவைகள் (employees of advisory services) மற்றும் நிபுணத்துவ நிறுவனங்களின் ஊழியர்களுடன் (expertise firms) தொடர்புடைய பல நடைமுறைகளை செயல்படுத்த இந்த சுற்றறிக்கை வலியுறுத்தியுள்ளது. இது கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்படுவதிலிருந்து அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த சுற்றறிக்கையில் ஆலோசனை நிறுவனங்கள் (consulting firms), நிபுணத்துவ நிறுவனங்கள் (expert houses) மற்றும் கூட்டாட்சி அதிகாரிகளுடன் நேரடியாக தங்கள் வளாகங்களுக்கு வருகை தந்து, கூட்டங்களில் கலந்துகொண்டு, அவர்களின் ஒப்பந்தங்களுக்குத் தேவையான பிற தொடர்புகள் அல்லது பணிகளைச் செய்பவர்கள் போன்ற ஊழியர்களும் அடங்குவர். கோவிட் -19 தடுப்பூசி பெற்ற ஊழியர்களைத் தவிர்த்து, இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் அல்லது ஊழியர்கள் (representatives or employees) மூன்று நாட்களுக்குள் எடுக்கப்பட்ட செல்லுபடியாகும் PCR சோதனை முடிவுகளைக் கொண்டிருப்பதை மத்திய அரசு நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சின் (MoHAP) கூட்டு ஒத்துழைப்புடன், கோவிட் -19 தடுப்பூசி அமீரகம் முழுவதும் உள்ள அமைச்சின் அனைத்து சுகாதார மையங்களிலும், அபுதாபி (DoH) சுகாதாரத் துறையின் சுகாதார மையங்களிலும் நாட்டின் பல தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டின் சுற்றறிக்கை எண் 2 இல், அரசு மனித வளங்களுக்கான பெடரல் ஆணையம் அனைத்து மத்திய அமைச்சகங்களையும் ஏஜென்சிகளையும் தங்கள் ஊழியர்களையும் தொழிலாளர்களையும் கொரோனா தடுப்பூசியை எடுக்க ஊக்குவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும், நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த தடுப்பூசிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!