அமீரக செய்திகள்

துபாய்: அல் மக்தூம் பிரிட்ஜில் SALIK கட்டணம் இல்லாத நேரத்தை மாற்றியமைத்த RTA…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய வார இறுதி நாட்கள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அல் மக்தூம் பிரிட்ஜில் (Al Maktoum bridge) சாலிக் (salik) கட்டணம் இப்போது ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசம் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) செவ்வாயன்று உறுதி செய்துள்ளது.

அதே போல் வாகன ஓட்டிகள் இப்போது வெள்ளிக்கிழமைகளில் அல் மக்தூம் பிரிட்ஜை கடப்பதற்கு சாலிக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தேரா க்ரீக்கில் உள்ள ஃப்ளோட்டிங் பிரிட்ஜ் மூடப்படும் நேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து இந்த புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இது பற்றி RTA செவ்வாயன்று வெளியிட்ட ட்வீட்டில் “Floating Bridge மூடப்படும் புதிய நேரங்கள் குறித்து RTA உங்களுக்குத் தெரிவிக்கிறது. இது 15 ஜனவரி 2022 சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். வார நாட்களில், வழக்கமான நேரப்படி இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பாலம் மூடப்படும்” என்று கூறியுள்ளது. 

அதேபோன்று வார இறுதியில் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை மூடப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த பாலம் வியாழன் இரவு 10 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஃப்ளோட்டிங் பிரிட்ஜ் மூடப்படும் நேரங்களில் அல் மக்தூம் பிரிட்ஜ் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சாலிக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் RTA உறுதி செய்துள்ளது.

இதன்படி அல் மக்தூம் பிரிட்ஜில் சாலிக் கட்டணம் வசூலிக்கப்படாத நேரங்கள்

வார நாட்கள்: இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை

வார இறுதி நாட்கள்: சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை

எனினும் மறு அறிவிப்பு வரும் வரை வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் மட்டும் துபாயில் பொது பார்க்கிங் இலவசம் என்றும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!