அமீரகத்தில் சோதனையில் இருக்கும் “கோவிட் டிராவல் பாஸ்” என்றால் என்ன..? அது பற்றிய விரிவான தகவல்கள் உள்ளே..!!

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியதிலிருந்து அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாடுகள் வெவ்வேறான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பயணிக்க குறிப்பிட்ட நாட்களில் எடுக்கப்பட்ட கொரோனா சோதனை சான்றிதழ், கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான பயண கட்டுப்பாடுகள் அனைத்து நாடுகளிலும் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு அவர்களின் பயணத்தை எளிதாக்கும் வண்ணம் சர்வதேச விமான பயண சங்கமானது (IATA) “IATA டிராவல் பாஸ்” எனும் ஒரு புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. இந்த IATA டிராவல் பாஸின் புதிய சோதனை முயற்சியில் அமீரகத்தில் உள்ள எட்டிஹாத் மற்றும் எமிரேட்ஸ் விமானங்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள 27 விமான நிறுவனங்கள் இணைந்துள்ளதாகவும் சில இணைய திட்டமிட்டுள்ளதாகவும் IATA தெரிவித்துள்ளது.

விமான சேவைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட விமானங்களின் உலகளாவிய கூட்டணி அமைப்பான IATA வின் டிராவல் பாஸ் என்பது ஒரு மொபைல் வழி பயன்பாடாகும். இது பயணத் தேவைகளின் ஒருங்கிணைந்த தகவல்களை கொண்டிருக்கும், மேலும் கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் பயணிகள் தாங்கள் பயணிக்கும் அனைத்து இடங்களுக்கும் தேவையான துல்லியமான தகவல்களையும், நுழைவுத் தேவைகளையும் கண்டறியவும் இது உதவுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயின் தேசிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏப்ரல் 15 அன்று பார்சிலோனாவுக்கு சென்ற தனது விமானத்தில் கோவிட் டிராவல் பாஸின் முதல் சோதனையை நடத்தியுள்ளது. அதேபோன்று லண்டனின் ஹீத்ரோவிலிருந்து துபாய்க்கு வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட விமானங்களிலும் சோதனையை தொடங்கியுள்ளது. மேலும் இந்த சோதனை விரைவில் பிற வழித்தடத்தில் இயங்கும் மற்ற விமானங்களிலும் தொடங்கப்படும் என்றும் எமிரேட்ஸ் தலைமை இயக்க அதிகாரி (COO) அடெல் அல் ரெட்ஹா தெரிவித்துள்ளார்.

கோவிட் பயண பாஸ் தேவை ஏன்?

தற்போது, ஒரு நாட்டிலிருந்து மற்ற ​​நாடுகளுக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் வெவ்வேறுபட்ட கோவிட் -19 சோதனைத் தேவைகளையும் மற்றும் மாறுபட்ட தொகுப்புகளையும் கொண்டுள்ளது. இந்த சோதனைகளில் சில PCR, LAMP, ஆன்டிஜென் மற்றும் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் ஆகியவை அடங்கும். இது அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் மற்றும் வேறொரு நாட்டிலிருந்து பயணிக்கும் பயணிகள், விமான நிறுவனங்களுக்கு ஒரு சவாலான மற்றும் சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளது.

இந்த சூழலில் தற்போது சோதனை முயற்சியில் இருக்கும் கோவிட் டிராவல் பாஸ் பயன்பாடு நடைமுறைக்கு வந்தால் ஒரு தரப்படுத்தப்பட்ட உலகளாவிய பயண பாஸ் குழப்பத்தை அகற்றலாம் என்றும், தேவையான ஆவணங்கள் குறித்த துல்லியமான தகவல்களை பயணிகளுக்கு வழங்கலாம் என்றும், பயணிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளால் அணுகக்கூடிய வெவ்வேறு பயன்பாடுகளை விட்டும் அனைத்து தகவல்களையும் ஒரே பயன்பாட்டில் பதிவேற்ற இது அனுமதிக்கும் என்றும் IATA கூறியுள்ளது.

மேலும் இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சுகாதார சோதனையின் திறனற்ற தன்மைகள், பிழைகள் மற்றும் மோசடிகளை இந்த பயன்பாட்டின் மூலம் அகற்றலாம் என்றும் IATA தெரிவித்துள்ளது.

IATA டிராவல் பாஸ் எவ்வாறு செயல்படுகிறது?

பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கோவிட் -19 பயணத் தேவைகள் தொடர்பான பல்வேறு நாட்டு விதிமுறைகளை சரிபார்க்கவும் அங்கீகரிக்கவும் அனைத்து அரசாங்கங்களுக்கும், விமான நிறுவனங்களுக்கும் IATA டிராவல் பாஸ் ஒரு தரப்படுத்தப்பட்ட தீர்வை வழங்குகிறது.

> விமானப் பயணத்திற்கான பயணம், சோதனை மற்றும் தடுப்பூசி தேவைகள் குறித்த தகவல்களைக் கண்டுபிடிக்க உதவும்.

> கொரோனா சோதனை மையங்கள் மற்றும் ஆய்வகங்களை அவர்கள் புறப்படும் மற்றும் / அல்லது வருகை இருப்பிடத்தில் கோவிட் -19 சோதனைகளை அவர்களின் பயணத்திற்குத் தேவையான சோதனை வகைக்கு ஏற்ப கண்டுபிடிக்கலாம்.

> பயணிகளுக்கு சோதனை முடிவுகள் அல்லது தடுப்பூசி சான்றிதழ்களை பாதுகாப்பாக அனுப்ப அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் மற்றும் சோதனை மையங்களை அடையாளம் காண உதவும்.

> ‘டிஜிட்டல் பாஸ்போர்ட்’ உருவாக்கவும், பயணிகளின் கொரோனா சோதனை முடிவு அல்லது தடுப்பூசி விதிமுறைகள் அந்தந்த நாடுகளின் அளவுகோலை பூர்த்தி செய்கிறதா என்பதை சரிபார்க்கவும் மற்றும் பயணத்தை எளிதாக்க சோதனை முடிவு அல்லது தடுப்பூசி சான்றிதழ்களை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவும்.

IATA டிராவல் பாஸின் சோதனையை தொடங்கிய விமான நிறுவனங்கள்

> எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்

> சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

> கத்தார் ஏர்வேஸ்

> எட்டிஹாட் ஏர்வேஸ்

> IAG (இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் குரூப்)

> மலேசியா ஏர்லைன்ஸ்

> கோப் ஏர்லைன்ஸ்

> ருவாண்ட் ஏர்

> ஏர் நியூசிலாந்து

> குவாண்டாஸ்

> ஏர் பால்டிக்

> கல்ஃப் ஏர்

> ANA ஏர்வேஸ்

> ஏர் செர்பியா

> தாய் ஏர்வேஸ்

> தாய் ஸ்மைல்

> கொரியா ஏர்

> நியோஸ்

> விர்ஜின் அட்லாண்டிக்

> எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்

> வியட்ஜெட் ஏர்

> ஹாங்காங் ஏர்லைன்ஸ்

> ஜப்பான் ஏர்லைன்ஸ்

> ஐபீரியா

> சவுதியா ஏர்லைன்ஸ்

> சுவிஸ் ஏர்

> EL AL ஏர்லைன்ஸ்