இந்தியாவிலிருந்து துபாய்க்கு திரும்பி வர Rs. 55 லட்சம் செலவு செய்த இந்தியர்..!!
இந்தியாவிற்கும் அமீரகத்திற்கும் இடையேயான விமான போக்குவரத்து தடையின் காரணமாக இந்தியாவில் சிக்கிக்கொண்ட துபாயைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் இந்தியாவிலிருந்து துபாய் திரும்பி வர 277,000 திர்ஹம்ஸ் செலவு செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. விமான தடையின் மூலம் துபாய்க்கு திரும்ப இயலாமல் தவித்துவந்த நிலையில், துபாய் விமான நிலைய அதிகாரிகளின் உதவியால் சார்ட்டர்டு விமானம் ஒன்றின் மூலம் துபாய்க்கு திரும்பி வந்துள்ளனர்.
இந்திய மதிப்பில் ரூபாய் 55 இலட்சம் செலவு செய்து தனி விமானம் மூலம் இந்தியாவிலிருந்து தனது குடும்பத்தினர்களுடன் துபாய்க்கு திரும்பி வந்த இந்திய தொழிலதிபரான முஷ்டாக் அன்ஃபர் இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், இவர் அமீரகத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் ‘ஊத் அல் அன்ஃபர்’ எனும் வாசனை திரவிய பிராண்டின் உரிமையாளர் ஆவார். இந்தியாவில் இருக்கும் தனது தாயுடன் விடுமுறையை கழிக்க இந்தியா சென்றிருந்த நிலையில், கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட விமான தடையின் காரணமாக இந்தியாவில் சிக்கிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரான அப்துல்லாஹ் அன்ஃபர் என்பவரும் தனது சமூக வலைதள பக்கதில் பகிர்ந்துள்ளார். அதில், “நான் துபாய்க்கு திரும்பி வர ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆதலால் நாங்கள் இந்த வழியை தேர்ந்தெடுத்தோம். இந்த நேரத்தில் துபாயில் இருந்து எங்களுக்கு நேரடியாக ஒரு தனி விமானத்தை ஏற்பாடு செய்த துபாய் விமான அதிகாரிகளுக்கு நன்றி” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதே போன்று கடந்த சில வாரத்திற்கு முன்பு கூட ஷார்ஜாவை சேர்ந்த அல் ராஸ் குழுமத்தை சேர்ந்த இந்திய தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் 200000 திர்ஹம்ஸ் செலவு செய்து கேரளாவிலிருந்து சிறப்பு விமானம் மூலமாக துபாய் வந்தடைந்திருந்தனர் என்பதும் கவனிக்கத்தக்கது.