தமிழக அரசுக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் வைக்கும் கோரிக்கை… தடுப்பூசி போட முன்னுரிமை வழங்கவும் வேண்டுகோள்…!!
உலகம் முழுவதிலும் பரவிய கொரோனா வைரஸின் பாதிப்புகள் தற்போது கொரோனாவிற்கான தடுப்பூசிகள் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் பெருமளவில் குறைந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா உட்பட உலகின் பல நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதிலும் பல நாடுகள் கொரோனாவிற்கான தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட பிற நாட்டவர்கள் தங்களின் நாட்டிற்கு வர அனுமதிப்பதுடன் அவ்வாறு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கும் அளித்து வருகிறது.
வெளிநாடுகளுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு உலகின் சில நாடுகள் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கிவரும் இவ்வாறான சூழலில், மும்பை மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 18 முதல் 44 வயதிற்குட்பட்டவர்கள் வேலைக்காக மற்றும் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்வதாக இருந்தால் அவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ள முன்னுரிமை வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் பாஸ்போர்ட் எண் குறிப்பிடப்படும் என்றும் அம்மாநில அரசாங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதேபோன்று வேலை, படிப்பு மற்றும் பிற காரணங்களுக்காக தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை வழங்க தமிழக அரசாங்கமும் ஆவண செய்ய வேண்டும் என பெரும்பாலான வெளிநாட்டு வாழ், குறிப்பாக சவூதி வாழ் தமிழர்கள் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
சவூதியில் சர்வதேச விமானப் போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டாலும், இந்தியா உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இருந்து வருவதற்கான தடை நீடிக்கிறது. இதனால், இந்தியாவில் இருந்து சவூதி செல்ல விரும்புபவர்கள் பஹ்ரைன் போன்ற இந்தியாவில் இருந்து பயணிகளை அனுமதிக்கும் வேறொரு நாட்டிற்குப் பயணம் செய்து அங்கு சில நாட்கள் தங்கிய பின்னர் சவூதிக்குப் பயணப்பட்டு வருகிறார்கள்.
எனவே, இத்தகைய சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழக அரசு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை தர வேண்டும் என தற்பொழுது தமிழகத்தில் இருக்கும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் தமிழகத்தில் ஏற்கனவே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஆதார் எண் குறிப்பிடப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்களில் அதற்கு பதிலாக பாஸ்போர்ட் எண்ணை குறிப்பிட்டு தடுப்பூசி சான்றிதழை மாற்றி தர ஏற்பாடு செய்யவும், கூடுதலாக COVISHEILD சான்றிதழ்களில் அடைப்புக்குறிக்குள் (ASTRAZENECA) என்று குறிப்பிட்டுத்தரவும் வெளிநாடு வாழ் தமிழர்களின் சார்பாகவும், சவூதிவாழ் தமிழர்களின் சார்பாகவும் “சவூதிவாழ் தமிழ் மன்றம்” தமிழக அரசிடம் இக்கோரிக்கையை வைத்துள்ளது.
தமிழக அரசு இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, பல மாதங்களாக இந்தியாவிலிருந்து பிற நாட்டிற்கு செல்ல முடியாத சூழலால் தவித்துவரும் ஆயிரக்கணக்கான வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியத்தின் மூலமாக உடனடியாக தீர்வு காண “கலீஜ் தமிழ் (Khaleej Tamil)” சார்பாகவும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.