அமீரக செய்திகள்

துபாய்: நவீன வசதிகளுடன் 32 புதிய தலைமுறை ஸ்மார்ட் கியோஸ்க்குகளை நிறுவிய RTA.!! 28 வகையான சேவைகளை இனி எளிதில் பெறலாம்..!!

வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை மேம்படுத்துவதற்கான இலக்குகளை அடையவும், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவருக்கும் எளிதான சேவைகளை வழங்குவதற்கும் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் நவீன வடிவமைப்புகளைக் கொண்ட 32 ஸ்மார்ட் கியோஸ்க் இயந்திரங்களின் புதிய தலைமுறையை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிமுகப்படுத்தியுள்ளது.

RTA அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய ஸ்மார்ட் கியோஸ்க் இயந்திரங்களில், உங்கள் நோல் கார்டை ரீசார்ஜ் செய்தல், வாகனப் பதிவு அட்டையைப் புதுப்பித்தல் மற்றும் பார்க்கிங் கட்டணம் அல்லது அபராதம் செலுத்துதல் உள்ளிட்ட 28 வகையான டிஜிட்டல் சேவைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் இந்த ஸ்மார்ட் கியோஸ்குகள் 24 மணி நேரமும் செயல்படுவதால் குடியிருப்பாளர்கள் எந்த நேரத்திலும் இதனை அணுக முடியும். அத்துடன் இந்த புதிய கியோஸ்க்குகள் தங்கள் பயனர்களுக்கு கிரெடிட் கார்டு, ஸ்மார்ட்போன்களில் NFC தொழில்நுட்பம் மூலம் பணம் செலுத்துதல் மற்றும் நேரடி பணம் உள்ளிட்ட பல்வேறு பேமன்ட் விருப்பங்களை வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

RTA வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இந்த இயந்திரத்தில் கைரேகை சென்சார், கிரெடிட், டெபிட் அல்லது எமிரேட்ஸ் ஐடி இன்செர்ஷன் யூனிட், NFC டேப்பிங் யூனிட் மற்றும் பணம் செலுத்துவதற்காக கார்டு விவரங்களை மேனுவலாக உள்ளிடுவதற்கான கீபேட் ஆகியவற்றுடன் இயக்கப்பட்ட பெரிய டச் ஸ்கிரீன் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தற்போது பயண்பாட்டிற்கு வந்துள்ள இந்த நவீன ஸ்மார்ட் கியோஸ்க் இயந்திரங்கள் RTA வின் பிரதான கட்டிடம், வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள், முக்கிய சேவை வழங்குநர் மையங்கள் மற்றும் துபாய் எமிரேட்டில் உள்ள பல முக்கிய இடங்கள் உட்பட 21 இடங்களில் நிறுவப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் புதிய கியோஸ்க்களின் செயல்திறனைக் கண்காணிக்கவும், சேவைகளை தொடர்ந்து மேம்படுத்தவும் இவை ஒரு தானியங்கி மற்றும் அறிவார்ந்த செயல்திறன் கண்காணிப்பு அம்சத்தால் வகைப்படுத்தப்படுவதாக RTA கூறியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு 24 மணிநேரமும் பயனுள்ள மற்றும் உயர்தர சேவைகளை வழங்க இது உதவும் எனவும் RTA தெரிவித்துள்ளது.

தற்சமயம் கூடுதலாக 6 இடங்களில் 8 புதிய கியோஸ்க்குகள் சேர்க்கப்பட்டதுடன் மற்ற 24 கியோஸ்க்குகள் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகளவிலான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் வகையில் வரும் காலங்களில் கியோஸ்க்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் இருப்பிடங்களின் விரிவாக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் RTA நம்பிக்கை தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் சேவைகளுடன் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2021 இல் ஸ்மார்ட் கியோஸ்க்களை மேம்படுத்தும் திட்டத்தை RTA அறிமுகப்படுத்தியிருந்தது. அன்று முதல் இந்த திட்டம் சமூகத்திற்கு சேவை செய்வதிலும் வாடிக்கையாளர் மகிழ்ச்சியின் அளவை அதிகரிப்பதிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!