வளைகுடா செய்திகள்

ஓமானில் வாட்டி வதைக்கும் வெயில்…!! அதிகபட்ச வெப்பநிலை 47.5 டிகிரி செல்சியஸ் என பதிவு!

ஓமானில் கடந்த சில தினங்களுக்கு முன் வரை ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் தற்பொழுது வெயில் வாட்டி வதைக்கின்றது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளன.

இதன்படி அதிக வெப்பநிலை பதிவான இடங்களில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் பவுஷர் (45°C), முக்ஷின் (தோஃபர்): (45°C), சுஹார் (44°C), ருஸ்டாக் (44°C), இப்ரி (44°C), சுமைல் (44°C), ஹிமா (43°C) மற்றும் மஸ்கட் சர்வதேச விமான நிலையம் (41°C) என வெப்பநிலை பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோன்று, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக இப்ரி விலாயத்தில் 47.5 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் மாதங்களில் வெப்பநிலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவானது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் இனி வரும் நாட்களிலும் வெப்பநிலையானது அதிகபட்சமாகவே பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸ்களை ஒட்டியே காணப்படும் என்றும், பாலைவனப் பகுதிகளில் அதைவிட அதிகமாக காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. Nature Sustainability எனப்படும் பத்திரிக்கை அறிவித்த அறிக்கையின் படி, வளைகுடா பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள நாடுகள் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய கடுமையான வெப்பத்தால் மிகவும் பாதிக்கப்பட கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், சராசரி ஆண்டு வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிக வெப்பத்தால் திறந்த வெளியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆய்வாளர்கள் நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், பகல் நேரங்களில் அதிகப்படியான வெப்பத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு தேவையான தண்ணீர், ஓய்விடங்கள் மற்றும் முதலுதவி சிகிச்சைகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அறிவித்துள்ளனர். ஓமான் நாட்டில் வெப்பநிலை எப்பொழுதும் அதிகமாக இருக்கும் மற்றும் மழைப்பொழிவும் குறைவாகவே இருக்கும் என்று ஏற்கனவே அறியப்பட்ட நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெப்பநிலை எதிர்பாராத வண்ணம் மேலும் அதிகரித்துள்ளது என்று ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!