அமீரக செய்திகள்

பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட துபாய் சஃபாரி பார்க்..!!

துபாய் சஃபாரி பார்க்கின் புதிய சீசன் நேற்று (அக்டோபர் 5ஆம் தேதி) முதல்  பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. சுமார் 119 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த துபாய் சஃபாரி பூங்காவில் ஏறத்தாழ 3,000 விலங்குகள் வாழ்கின்றன.

இந்த துபாய் சஃபாரி பூங்காவில் நீங்கள் என்னவெல்லாம் பார்க்கலாம், டிக்கெட் விலை எவ்வளவு, எப்படி செல்வது போன்ற உங்களுக்கான முழு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது:

சுமார் 119 ஹெக்டேருக்கு மேல் இருக்கும் அதாவது 166 கால்பந்து மைதானங்களுக்குச் சமமான பரப்பளவைக் கொண்டிருக்கும் முழு சஃபாரியையும் நீங்கள் பார்வையிட வேண்டுமெனில், நடை பயணம் மேற்கொள்வது பொருந்தாது. எனவே, பார்வையாளர்களை அழைத்துச் செல்வதற்கென டிராம் சேவை வழங்கப்படுகிறது, இது உங்களை பூங்காவின் ஒரு வேலியில் (enclosure) இருந்து மற்றொன்றுக்கு அழைத்துச் செல்லும்.

துபாய் சஃபாரி பூங்காவில் உள்ள பல்வேறு பகுதிகள்:

  • அரேபிய பாலைவன சஃபாரி: இந்த பாலைவன பகுதியில் நீங்கள் அரேபிய ஓநாய், அரேபியா ஓரிக்ஸ் மற்றும் நீண்ட கொம்புகளைக் கொண்ட அரேபிய மான் ஆகியவற்றைக் காணலாம்.
  • ஏசியன் வில்லேஜ்: இங்கு ஆசியாவின் பல்வேறு வனவிலங்குகள், காடுகள் போன்றவற்றை பார்க்கலாம். குறிப்பாக, நிலவுக் கரடி எனப்படும் மூன் பியர், கிப்பன் எனப்படும் சிறிய வகை மனிதக் குரங்கு மற்றும் மாண்டரின் வாத்துகளை கண்டு ரசிக்கலாம்.
  • எக்ஸ்ப்ளோரர் வில்லேஜ்: துபாய் சஃபாரியின் முக்கிய ஈர்ப்பு சஃபாரி வில்லேஜ் ஆகும், இங்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகள், நீர்யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், இம்பாலாக்கள் மற்றும் வரிக்குதிரைகள் உள்ளிட்ட வனவிலங்குகளைப் பார்த்தவாறே பயணிக்கலாம்.
  • ஆப்பிரிக்க வில்லேஜ்: இந்த பகுதியில் ஆப்பிரிக்க யானை ‘ஹீரோ விலங்காக’ இருப்பதால், ஆப்பிரிக்க கண்டத்தின் வெள்ளை சிங்கங்கள், கொரில்லாக்கள் மற்றும் ஹைனாக்கள் உள்ளிட்ட அரிய விலங்குகளைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.
  • குழந்தைகள் பண்ணை: இந்த பெயருக்கு ஏற்றார் போல, இங்கு செம்மறி, கழுதை, குதிரைவண்டி, ஆடுகள், வாத்துகள் மற்றும் பறவைகள் உள்ளிட்ட பண்ணை விலங்குகளுடன் பழக அனுமதிக்கப்படும். எனவே, குழந்தைகள் மறக்க முடியாத அனுபவத்தைப் பெறுவார்கள்.
  • அல் வாதி (Al wadi): அல் வாதி என்றால் பள்ளத்தாக்கு என்று அர்த்தம். இங்கு உள்ள உணவகங்களில் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கவும், உல்லாசப் பயணம் மேற்கொள்ளவும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

டிக்கெட் விலை:

துபாய் சஃபாரி பார்க் பார்வையாளர்களின் வருக்கத்தின் அடிப்படையில் பல்வேறு பேக்கேஜ் விருப்பங்களை வழங்குகிறது. பேக்கேஜ் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்:

தனிப்பட்ட டிக்கெட்டுகள் – டே பாஸ் (DAY PASS)

  • பெரியவர்கள் – 50 திர்ஹம்
  • குழந்தை (வயது 3 முதல் 12 வயது வரை) – 20 திர்ஹம்

இந்த பாஸ் மூலம், அல் வாதி வழியாக ஆப்பிரிக்க, ஆசிய மற்றும் எக்ஸ்ப்ளோரர் வில்லேஜ்களுக்கு ஒரு நடைப்பயணத்தை மேற்கொள்ளலாம், மேலும் நேரடி நிகழ்ச்சிகள், குழந்தைகள் பண்ணை மற்றும் அரேபிய பாலைவன சஃபாரியின் 10 நிமிட ஷட்டில் சுற்றுப்பயணத்தை அனுபவிக்கலாம்.

சஃபாரி பயணம்

  • பெரியவர்கள் – 90 திர்ஹம்
  • குழந்தை (வயது 3 முதல் 12 வயது வரை)- 35 திர்ஹம்

இது ஆப்பிரிக்க, எக்ஸ்ப்ளோரர் வில்லேஜ் மற்றும் ஆசிய வில்லேஜ் வழியாகவும், வரம்பற்ற டிராம் பயணத்தையும்,  நேரலை நிகழ்ச்சிகள், குழந்தைகளின் பண்ணை, சஃபாரி பயணம் (35 நிமிட வழிகாட்டப்பட்ட பேருந்து பயணம்) மற்றும் மின்சார வாகனம் மூலம் 10 நிமிட அரேபிய பாலைவன சஃபாரியையும் வழங்குகிறது.

டே பாஸ் +

  • பெரியவர்கள் – 75 திர்ஹம்
  • சிறுவர்கள் – 45 திர்ஹம் (வயது 3 முதல் 12 வயது வரை)

இது ஆப்பிரிக்க, ஆசிய மற்றும் எக்ஸ்ப்ளோரர் வில்லேஜ்களுக்கு போக்குவரத்துச் சேவையை வழங்குகிறது, மேலும் வரம்பற்ற டிராம் பயணங்கள், நேரடி நிகழ்ச்சிகளில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகள், குழந்தைகள் பண்ணை மற்றும் எலெக்ட்ரிக் வாகனத்தில் 10 நிமிட அரேபிய பாலைவன சஃபாரி போன்றவற்றை அணுகலாம்.

சஃபாரி பயணம்

  • பெரியவர்கள் – 110 திர்ஹம்
  • குழந்தை – 55 திர்ஹம் (வயது 3 முதல் 12 வயது வரை)

இது வரம்பற்ற டிராம் பயணங்கள், சஃபாரி பயணம், பத்து நிமிட அரேபிய பாலைவன சஃபாரி, முன்பதிவு செய்யப்பட்ட போக்குவரத்து  சேவை மூலம், ஆப்ரிக்க, ஆசிய மற்றும் எக்ஸ்ப்ளோரர் வில்லேஜ்களின் முழு அனுபவத்தையும் வழங்குகிறது. இவற்றுடன் பின்வரும் மூன்று பிரத்யேக பேக்கேஜ் பற்றி பார்க்கலாம்:

  • அதுமட்டுமின்றி, நீங்கள் 10 பேருக்கு 2,500 திர்ஹம்ஸ் என்ற விலையிலும்,  ‘கிங் ஆஃப் சஃபாரி’போன்ற சிறப்புச் சுற்றுலாக்களுக்கான டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யலாம்,  இது கும்பலாக வரும் பார்வையாளர்களுக்கு ஆடம்பர அனுபவத்தை அளிக்கிறது.
  • அதேபோல், ‘Behind the scenes’ சுற்றுலா பேக்கேஜின் (10 நபர்களுக்கு 1,450 திர்ஹம்) மூலம், நீங்கள் விலங்கு பராமரிப்பாளர்களைச் சந்தித்து அவர்களின் வேலையைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்.
  • மேலும் புகைப்பட ஆர்வலர்கள், ‘ஜங்கிள் கேப்சர்’ என்ற (மூன்று நபர்களுக்கு 1,275 திர்ஹம்கள்) பேக்கேஜ் மூலம், வனவிலங்கு மற்றும் இயற்கை புகைப்படங்களை எடுப்பதற்கான பிரத்யேக அணுகலைப் பெறலாம்.

துபாய் சஃபாரி பார்க்கிற்கு செல்வது எப்படி?

இந்த பார்க் அல் வர்கா 4 மாவட்டத்தில், E44, ராஸ் அல் கோர் சாலையில் அமைந்துள்ளது. நீங்கள் முதலில் E311 – ஷேக் முகமது பின் சயீத் சாலை – மற்றும் எக்ஸிட் 52 இல் செல்ல வேண்டும். ஒருவேளை, நீங்கள் ஷார்ஜா அல்லது அபுதாபி திசையில் இருந்து வந்தாலும், எக்ஸிட் 52 இல் தான் செல்ல வேண்டும்.

இந்த எக்ஸிட் உங்களை டிராகன் மார்ட்டை நோக்கி அழைத்துச் செல்லும், அது உங்கள் வலதுபுறத்தில் இருக்கும். துபாய் சஃபாரி பார்க்கை அடைய முதல் ரவுண்டானாவிலிருந்து U-டர்ன் எடுக்க வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!