அமீரக செய்திகள்

மனிதாபிமான அடிப்படையில் அமீரகம் திரும்பி ஒன்றிணைந்த இந்தியக் குடும்பம்..!!

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் அமீரகம் திரும்புவதற்கு விலக்கு அளிக்கப்பட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ஒன்றான மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு குடும்பம் அமீரகத்திற்கு திரும்பி வந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அக்குடும்பத்தினர் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

ஃப்ளோரா ஹோட்டல் சேல்ஸ் டைரக்டராக பணிபுரியும் சஜீவ் ஜோசப் என்பவர் இது குறித்து கூறுகையில், அவரது மனைவி ஷீனா மற்றும் மகன் அமல் உட்பட அவரது குடும்பத்தினர் வருடாந்திர விடுமுறைக்காக கடந்த மார்ச் 24 அன்று இந்தியாவுக்குச் சென்றதாகவும், அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 24 முதல் விதிக்கப்பட்ட பயணத்தடையால் இந்தியாவிலேயே சிக்கித் தவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பயணத்தடையால் சிக்கித்தவித்த ஜோசப்பின் மனைவியும் மகனும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொச்சியில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்தடைந்துள்ளனர்.

ஜோஷப் தெரிவிக்கையில், “எனது மூத்த மகள் அஞ்சலி கேரளாவில் தனது உயர் படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். எங்கள் விடுமுறையின் ஆரம்ப நாட்களை நாங்கள் நன்றாக அனுபவித்தோம். பின்னர் ஏப்ரல் 24 ம் தேதி பயணத்தடை அறிவித்தது முதல் அமீரகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தோம்” என்றார்.

அமீரகத்தில் தனது வேலைக்கு திரும்ப நினைத்த ஜோசப் ஒரு மாதத்திற்கு முன்பு ஆர்மீனியா வழியாக ஐக்கிய அரபு அமீரகம் திரும்பியுள்ளார்.

“நான் என் குடும்பத்தை என்னுடன் அழைத்து வர விரும்பினாலும், மூன்றாவது நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அமீரகம் திரும்புவதற்கான செலவானது மிக அதிகமாக இருந்தது. ஒரு நபரின் பயணச் செலவை மட்டுமே என்னால் செலுத்த முடியும், ”என்று அவர் மேலும் கூறினார்.

இதனால் ஷீனா, ஷார்ஜாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகன் அமலுடன் தொடர்ந்து இந்தியாவில் தங்க முடிவு செய்தார்.

மேலும் ஜோசப் கூறுகையில், “என் மகன் இந்த ஆண்டு பள்ளியின் கடைசி வருடத்தில் இருக்கிறான். அதனால் நாங்கள் விரைவில் அமீரகம் திரும்ப வேண்டிய சூழல் இருந்தது” என்றார் ஜோசப்.

“இதனால் நாங்கள் அமீரகம் திரும்புவதற்கு எல்லா வழிகளிலும் முயற்சித்தோம்” என்று தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

“இந்த நிலையில் கடந்த வாரம், ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (GCAA) மற்றும் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) ‘சிவப்பு பட்டியலிடப்பட்ட நாடுகளிலிருந்து முழுமையாக தடுப்பூசி பெற்ற குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள் நாடு திரும்பலாம் என்று அறிவித்தபோது, ​​நாங்கள் நிம்மதியாக உணர்ந்தோம்”.

“துரதிருஷ்டவசமாக என் மனைவி அமீரகத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசியை எடுக்கவில்லை. அவர் இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளார். இதனால் மீண்டும் ஏமாற்றமடைந்தோம். அதன் பின்னர் நாங்கள் தொடர்பு கொண்ட ஒரு பயண நிறுவனம், மனிதாபிமான அடிப்படையில் திரும்ப முடியும் என்று எங்களுக்குத் தெரிவித்தது”என்று ஜோசப் மேலும் கூறினார்.

ஜோசப் குடும்பம் மனிதாபிமான அடிப்படையில் விண்ணப்பித்தது எப்படி?

18 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் ஜோசப் “எங்களிடம் துபாய் ரெசிடென்ஸ் விசா உள்ளது. நான் அரூஹா டிராவல் ஏஜென்சியை உதவிக்காக அணுகினேன், அவர்கள் விண்ணப்ப செயல்முறையை மேற்கொண்டனர்”.

“அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையத்தின் (ICA) ‘பயணிகள் வருகை’ பிரிவில் எங்கள் விவரங்களை நிறுவனம் புதுப்பித்தது. இதற்குப் பிறகு, அமலும் ஷீனாவும் GDRFA நுழைவு அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து அவற்றைப் பெற்றனர்” என கூறியுள்ளார்.

ஷீனா இது பற்றி தெரிவிக்கையில், “நாங்கள் RT-PCR சோதனைகளை மேற்கொண்டு விமான நிலையத்திற்குச் சென்றோம். கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் (CIAL) உள்ள செக்-இன் கவுண்டரில், நாங்கள் மனிதாபிமான விலக்குடன் பயணிக்க விரும்புகிறோம் என்று அதிகாரிகளுக்கு விளக்கினோம்” என்றார் ஷீனா.

பின்னர் அவர்களின் ஸ்பான்சரின் (ஜோசப்பின்) பாஸ்போர்ட் மற்றும் எமிரேட்ஸ் ஐடி நகல்களை ஆதாரமாக வழங்கி மற்றும் நான்கு மணிநேர ரேபிட் PCR சோதனையை முடித்த பிறகு இவர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

“விமான டிக்கெட்டிற்கு ஒரு நபருக்கு 1,250 திர்ஹம் செலவாகியத என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரூஹா டிராவல்ஸின் நிர்வாக இயக்குனர் ரஷித் அப்பாஸ் கூறுகையில் “இந்த சேவை நேரடியானது மற்றும் அணுகுவதற்கு எளிதானது. பயணம் செய்ய விரும்பும் பலருக்கும் இதற்காக பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் பற்றி தெரியாது. ஜோசப்பைப் போலவே, நாங்கள் மற்றொரு குடும்பத்திற்கும் உதவியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!