வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு வரும் பயணிகளுக்கு 7 நாள் தனிமைப்படுத்தல் கட்டாயம்..!! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்..!!

இந்தியாவில் தற்போது கொரோனாவின் மாறுபட்ட வைரஸான ஒமிக்ரான் தொற்று பரவல் சற்று உயர தொடங்கியிருப்பதால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. அதே போன்று தமிழகத்திலும் ஒரு சிலர் ஓமிக்ரான் தொற்றால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதால் மேற்கொண்டு பரவாமல் தடுக்க தமிழக அரசும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
அதன் ஒருபகுதியாக தற்போது வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு 7 நாள் வீட்டு தனிமைப்படுத்தலை மீண்டும் அமலுக்கு கொண்டு வருவதாகவும், எட்டாவது நாளில் ‘எக்ஸிட் டெஸ்ட்’ அதாவது தனிமைப்படுத்தலின் இறுதியில் ஒரு கொரோனா சோதனை செய்ய அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தடைந்த பயணிகளில் 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், “ஒமிக்ரான் பரவலைத் தடுக்க வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வரும் பயணிகள் அனைவரும் இன்று 26/12/2021 முதல் 7 நாள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வது கட்டாயம்” என தெரிவித்துளளார்.
மேலும் இந்திய அரசால் வகைப்படுத்தப்பட்டுள்ள ‘Risk’ நாடுகள் மட்டுமின்றி, ‘Non Risk’ எனப்படும் பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கும் 7 நாள் தனிமை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போன்று இதற்கு முன்னதாக ‘Non Risk’ நாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த கொரோனா பரிசோதனை விகிதமானது 2% லிருந்து 10% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பரிசோதனை முடிவுகள் 5 நாட்களில் வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை இதுவரையிலும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7- லிருந்து 12 ஆக அதிகரித்துள்ளது. எனவே தற்போதைய சூழலில் கூட்டமாகப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவது, புத்தாண்டு கொண்டாட மக்கள் பிற மாநிலங்களுக்குச் செல்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடியது என்பதால் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும், அதிகம் பேர் கூடும், ஆடல், பாடல் போன்ற நிகழ்ச்சிகளை விடுதி உரிமையாளரும், மக்களும் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.