அமீரக செய்திகள்

UAE: பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படும் அபுதாபியின் முக்கிய சாலைகள்..!! வாகன ஓட்டிகளுக்கு ITC அறிவுரை…!!

அபுதாபி நகரின் சில முக்கிய தெருக்களில் உள்ள சாலைகள் மற்றும் குறிப்பிட்ட நெடுஞ்சாலைகள் இந்த வார இறுதியில் பகுதியளவு  மூடப்பட உள்ளதாக அபுதாபியின் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம்  அறிவித்துள்ளது. இது குறித்து செய்தி வெளியிட்ட நகராட்சிகள் துறை மற்றும்  ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) அதன் சமூக ஊடக தளங்களில் மூடப்படும் சாலைகளின் விபரங்களை பகிர்ந்து கொண்டுள்ளது.

மேலும் சாலை மூடல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மாற்றுப்பாதைகள் அறிவிக்கப்பட்டாலும் அவ்வாறு செல்லும்போது கவனமாக வாகனம் ஓட்டுமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சாலைப் பணிகளை எளிதாக்கும் வகையில், போக்குவரத்து நெரிசல் குறைவாக உள்ள காலங்களான வார இறுதி நாட்களில் இந்த சாலை  மூடல்கள் பொதுவாக செயல்படுத்தப்படுகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையில் மூடப்படும் பகுதிகள்

அல் மக்தா பிரிட்ஜில் (Al Maqta Bridge) பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் அல் மக்தா பிரிட்ஜ் சாலையின் இரு திசைகளிலும் இடது பக்கத்தில் உள்ள இரண்டு பாதைகள்  வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 16) இரவு 11 மணி முதல் வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 19) அதிகாலை 5 மணி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் கலீஜ் அல் அரபி ஸ்ட்ரீட் (Khaleej Al Arabi Street) சாலையின் இடது பக்கத்தில் உள்ள இரண்டு பாதைகளும், கலீஃபா சிட்டியில் (Khalifa city) இருந்து ஸ்வீஹானை (sweihan) நோக்கிய அதன் வளைவுப் பாதையும் இரவு 11 மணி முதல் வரும் திங்கள் அதிகாலை 5 மணி வரை பகுதியளவில் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.

சிட்டியின் முக்கிய தெருக்களில் மூடப்படும் சாலைகள்

அபுதாபி சிட்டியை பொறுத்தவரை, ஏர்போர்ட் ரோடு என்று பிரபலமாக அறியப்படும் ஷேக் ரஷித் பின் சையத் ஸ்ட்ரீட் (Sheikh Rashid Bin Zyed Street) சாலையானது, சையத் தி ஃபர்ஸ்ட் ஸ்ட்ரீட் (Zyed the First Street) இன்டர்செக்‌ஷன் வரையிலும் பகுதியளவு மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல அபுதாபி சிட்டிக்குள் உள்ள சையத் தி ஃபர்ஸ்ட் ஸ்ட்ரீட் மற்றும் அல் மவ்கிப் ஸ்ட்ரீட் (Al Mawkib Street) இடையே உள்ள கார்னிச் நோக்கிச் செல்லும் ஷேக் சையத் ஸ்ட்ரீட் சாலையின் இடது பக்கத்தில் உள்ள இரண்டு பாதைகள் சனிக்கிழமை (செப்டம்பர் 17) நள்ளிரவு முதல் வரும் திங்கள் (செப்டம்பர் 19) நள்ளிரவு வரை மூடப்படும் எனவும தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூடல்களின் போது, வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் கவனமாக ஓட்டவும், மேலும் அனைத்து போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்கவும் ITC கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!