அமீரக செய்திகள்

துபாய் மெட்ரோவின் ‘ப்ளூ லைன்’ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த துபாய் ஆட்சியாளர்..!!

துபாயில் தற்பொழுது கிரீன் லைன், ரெட் லைன் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக புளூ லைன் திட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக X தளத்தில் வெளியிட்ட பதிவில், ப்ளூ லைன் எனப்படும் துபாய் மெட்ரோ பாதை, சுமார் 18 பில்லியன் டாலர் செலவில் 30 கிமீ நீட்டிக்கப்படும் என்று ஷேக் முகமது குறிப்பிட்டுள்ளார். முதன்முதலில் 2009 இல் தொடங்கப்பட்ட துபாய் மெட்ரோ, கடந்த 14 ஆண்டுகளில் 2 பில்லியனுக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை செய்து, பொதுப் போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதுள்ள ரெட் மற்றும் க்ரீன் லைன் மெட்ரோ பாதைகளுடன் இணைக்கப்படும் ப்ளூ லைன், 15.5 கிமீ நிலத்தடியிலும், 14.5 கிமீ உயரமான ரயில் பாதையாகவும் அமைக்கப்படும். இது தினசரி 320,000 புதிய பயணிகளைக் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த லைன் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி, துபாய் க்ரீக் ஹார்பர், இன்டர்நேஷனல் சிட்டி, அல் ரஷிதியா, அல் வர்கா, மிர்திஃப், துபாய் சிலிக்கான் ஒயாசிஸ், அகாடமிக் சிட்டி மற்றும் பிற அண்டை பகுதிகளுக்கு சேவை செய்யும் என்றும், இதற்கான நடவடிக்கை 2029 இல் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளூ லைன் திட்டம்:

ப்ளூ லைன் கட்டுமானம் தொடர்பாக RTA வெளியிட்டுள்ள டெண்டரின் படி, இந்த லைனில் மொத்தம் 14 நிலையங்கள் இருக்கும். அதில், ஒரு ஐகானிக் ஸ்டேஷன் உட்பட, ஏழு உயரமான ரயில் பாதையாகவும், ஐந்து நிலத்தடி வழியாகவும் மற்றும் ரஷிடியாவில் உள்ள ரெட் லைனின் கிழக்கு முனையமான, தற்போதுள்ள சென்டர்பாயின்ட் நிலையத்துடன் இணைக்கப்பட்ட இரண்டு உயரமான பரிமாற்ற நிலையங்களான க்ரீக் நிலையம், அல் ஜதாஃபில் உள்ள கிரீன் லைனின் தெற்கு முனையம் அடங்கும்.

கூடுதலாக, 28 புதிய ஓட்டுநர் இல்லா ரயில்கள் வழங்குவது, 60 ரயில்கள் வரை பயணிக்கும் வகையில் ஒரு புதிய டெப்போவை நிர்மாணிப்பது மற்றும் ப்ளூ லைனுக்கான அனைத்து தொடர்புடைய சாலைகள், வசதிகள் மற்றும் பயன்பாட்டு திசைதிருப்பல் பணிகள் ஆகியவை டெண்டரில் சேர்க்கப்பட்டுள்ளன.

கட்டுமானத் திட்டம்:

இத்திட்டத்தின் முழுமையான மதிப்பீட்டிற்குப் பிறகு, அடுத்த ஆண்டு திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படும். மெட்ரோ பாதை அமைப்பதற்கான சோதனை நடவடிக்கை 2028 இல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

துபாய் 2040 நகர்ப்புற திட்டத்தின் ஒரு பகுதியாக வரும் ப்ளூ லைன் மெட்ரோ நீட்டிப்பு, பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளின் முக்கிய மையங்களுக்கு இடையே இணைப்புகளை மேம்படுத்துவதாக RTA வெளியிட்ட டெண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!